பலத்த எதிர்பார்ப்புக்களுடன் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி

335

இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு இது டெஸ்ட் போட்டிகளுக்கான நேரம், ஆம் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் புதிய பருவத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை (16) பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் போட்டி அமைவதோடு போட்டி காலியில் ஆரம்பமாகின்றது. அதேநேரம் இந்த டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாம் நேற்று (13) அறிவிக்கப்பட்டிருந்தது.

>> இலங்கை டெஸ்ட் அணிக் குழாத்தில் மீண்டும் பெதும் நிஸ்ஸங்க

நாம் இந்த டெஸ்ட் போட்டியின் முன்னோட்டம் தொடர்பில் இங்கே பார்வையிடுவோம். கடந்த ஆண்டும் இதே காலப்பகுதியில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி இங்கே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்ததோடு குறித்த தொடர் 1-1 என சமநிலை அடைந்திருந்தது. இந்த டெஸ்ட் தொடர் அடங்கலாக இரு அணிகளும் இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருப்பதோடு அதில் 21 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியும், இலங்கை 17 போட்டிகளிலும் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. இது பாகிஸ்தான் அணி இலங்கை உடனான டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியதனை காட்டுகின்றது.

ஆனால் கடைசி ஐந்து வருடங்களை நோக்கும் போது (2017ஆம் ஆண்டிலிருந்து) இரு அணிகளும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிருக்கின்றன. இந்த 6 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை மூன்று வெற்றிகளையும் பாகிஸ்தான் 2 வெற்றிகளையும் பதிவு செய்திருக்க ஒரு போட்டி சமநிலை அடைந்திருந்தது. இந்த தரவுகள் இலங்கை அணி அண்மைக்காலத்தில் பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் காட்டியதுக்கு சான்றாக அமைகின்றது.

இலங்கை அணி

இலங்கை அணி தொடரின் முதல் போட்டிக்காக மாத்திரமே தமது குழாத்தினை வெளியிட்டிருக்கின்றது. இந்த குழாத்தில் பெதும் நிஸ்ஸங்க அழைக்கப்பட்டிருக்கின்றார். இலங்கை அணிக்காக சில காலம் டெஸ்ட் போட்டிகளில் ஆடாது போயிருந்த நிஸ்ஸங்க மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது இலங்கை அணி இந்த தொடரில் சிறந்த முன்வரிசைத் துடுப்பாட்டவீரர்களுடன் இருப்பதற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது.

அணித்தலைவர் திமுத் கருணாரட்ன, நிஷான் மதுஷ்க, தினேஷ் சந்திமால் என இலங்கை அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரர்களின் பதிவுகள் அண்மைய நாட்களில் சிறப்பாக இருப்பதோடு இது இந்த வீரரர்கள் தமது துடுப்பாட்டம் மூலம் இலங்கை அணிக்கு நம்பிக்கை தருவார்கள் என்பதற்கும் சான்றாகின்றது. இதில் திமுத் கருணாரட்ன இலங்கை அணியுடனான போட்டியில் ஆட பூரண உடற்தகுதியினை நிரூபிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. திமுத் கருணாரட்ன ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் காயம் காரணமாக ஆடாது போயிருந்தமையே இதற்கான காரணமாகும்.

இவர்கள் தவிர தனன்ஞய டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ், சதீர சமரவிக்ரம ஆகிய வீரர்கள் இலங்கை அணிக்கு மேலதிக நம்பிக்கையாக காணப்படுகின்றனர்.

அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது நான்கு சிறப்பு சுழல்வீரர்களுடன் டில்சான் மதுசங்கவின் வேகத்தினையும் இலங்கை அணி இந்த தொடரில் நம்பியிருக்கின்றது. அந்தவகையில் சுழலுக்கு சாதகமான காலி மண்ணில் இலங்கை அணியின் நம்பிக்கைக்குரிய சுழல்வீரராக பிரபாத் ஜயசூரியவுடன் இணைந்து பிரவீன் ஜயவிக்ரம, லக்ஷித மானசிங்க மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

>> பாகிஸ்தான் வீரர்களின் அரைச்சதங்களோடு நிறைவடைந்த பயிற்சிப் போட்டி 

இலங்கை குழாம்

திமுத் கருணாரட்ன (தலைவர்), நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா, பெதும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, பிரவீன் ஜயவிக்ரம, கசுன் ராஜித, டில்சான் மதுசங்க, விஷ்வ பெர்னாண்டோ, லக்ஷித மானசிங்க

பாகிஸ்தான் அணி

இலங்கைத் தொடருக்கான பாகிஸ்தான் குழாத்தினை நோக்கும் போது அவ்வணி ஐ.சி.சி. டெஸ்ட் துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் காணப்படுகின்ற பாபர் அசாம் தலைமையில் இலங்கையை எதிர்கொள்கின்றது. பாபர் அசாம் உடன் இமாம்-உல்-ஹக், அப்துல்லா சபீக் ஆகியோர் அணியின் முன்வரிசை வீரர்களாக துடுப்பாட்ட நம்பிக்கை தருகின்றனர்.

இவர்கள் ஒரு பக்கமிருக்க ஷான் மசூத், சௌத் சகீல், சல்மான் அகா, சர்பராஸ் அஹ்மட் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோரின் துடுப்பாட்ட சேவையும் பாகிஸ்தானுக்கு காணப்படுகின்றது. இதில் ஷான் மசூத், சௌத் சகீல் ஆகிய வீரர்கள் இலங்கை வீரர்களுடன் நடந்தப் பயிற்சிப் போட்டியில் ஏற்கனவே சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.

மறுமுனையில் அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது நௌமான் அலி, அப்றார் அஹ்மட் ஆகியோர் அணியின் பிரதான சுழல்வீரர்களாகவும் சஹீன் அப்ரிடி, ஹஸன் அலி ஆகிய வீரர்கள் பிரதான வேகப்பந்துவீச்சாளர்களாகவும் காணப்படுகின்றனர்.

பாகிஸ்தான் குழாம்

பாபர் அசாம் (தலைவர்), மொஹமட் ரிஸ்வான், ஆமிர் ஜமால், அப்துல்லா சபீக், அப்ரர் அஹ்மட், ஹஸன் அலி, இமாம்-உல்-ஹக், மொஹமட் ஹுரைரா, மொஹமட் நவாஸ், நசீம் ஷா, நோமான் அலி, சல்மான் அலி ஆகா, சர்பராஸ் அஹ்மட், சௌத் சகீல், சஹீன் அப்ரிடி, ஷான் மசூத்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<