2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 15ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்துவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2ஆவது தடவையாக பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இதற்கு முன் 2008ஆம் ஆண்டு கராச்சியில் ஆசிய கிண்ண போட்டிகள் நடைபெற்றதுடன், இதில் இந்தியாவை 100 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை அணி சம்பியனாகத் தெரிவாகியது.
இலங்கைக்கு மிகப் பெரிய சவாலுடன் காத்திருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி
நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ….
இந்த நிலையில், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இப்போட்டித் தொடர் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டிகள் அனைத்தும் எங்கு நடைபெறும் என்பது அறிவிக்கப்படவில்லை.
இலங்கை, இந்தியா உட்பட ஆசியாவின் 6 பலம் வாய்ந்த கிரிக்கெட் அணிகள் மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் 1984ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் பேரவையினால் (ICC) வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, ஆசிய கிண்ண போட்டிகள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு நாள் கிண்ணம், டி-20 கிண்ணம் என நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணத்துக்கு முன் ஆயத்தமாக அதே ஆண்டு முதல் முறையாக ஆசிய கிண்ணப் போட்டித் தொடர் டி-20 போட்டிகளாக பங்களாதேஷில் நடைபெற்றது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட ஐந்து நாடுகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரில் பங்களாதேஷ் அணியை வீழ்த்திய இந்திய அணி சம்பியனாகத் தெரிவாகியது.
இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத்துக்கு முன் ஆயத்தமாக அதே ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை டி-20 போட்டிகளாக பாகிஸ்தானில் நடத்துவதற்கான உரிமையை ஆசிய கிரிக்கெட் பேரவை நேற்று (13) வழங்கியது.
அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிய கிரிக்கெட் பேரவையின் முதலாவது நிறைவேற்றுக் குழு கூட்டம் அதன் தலைவரான நஸ்முல் ஹஸன் தலைமையில் நேற்று (13) டாக்காவில் இடம்பெற்றது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய கிரிக்கெட் பேரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளையும் சேர்ந்த பிரிதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
ஆசிய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்ட குறித்த கூட்டத் தொடரில் 2020 ஆசிய கிண்ண டி-20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
2020 இல் டி-20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதன்படி, ஆசிய கிண்ண டி-20 தொடரை செப்டெம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக நஸ்முல் ஹசன் தெரிவித்தார். ஆனால் போட்டிகள் நடைபெறும் மைதானம் மற்றும் திகதிகள் என்பன எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
மெண்டிஸின் அதிரடியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை வளர்ந்து வரும் அணி
பங்களாதேஷ் அணிக்கு எதிரான வளர்ந்து வரும் அணிகளுக்கு …
ஆசிய கிண்ணப் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்துவது குறித்து அந்த நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் இஹ்ஸான் மனி கருத்து வெளியிடுகையில், ”ஆசியாவில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்கவுள்ளோம். அதன்படி, எதிர்வரும் காலங்களில் 16 வயதின் கீழ் மற்றும் 19 வயதின் கீழ் ஆசிய கிண்ண போட்டிகளை நாங்கள் தொடர்ந்து நடத்த வேண்டும். அதேபோன்று, பாகிஸ்தானில் சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கான சாதகமான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே 2020 இல் ஆசிய கிண்ணப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேம்” என தெரிவித்தார்.
முன்னதாக, 14ஆவது ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த செப்டெம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றது. இந்த தொடர் இந்தியாவில்தான் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே நிலவி வருகின்ற அரசியல் முரண்பாடுகள் காரணமாக பாகிஸ்தான் அணி அங்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதேபோன்று, வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண ஒருநாள் போட்டித் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் பாகிஸ்தானுடனான அரசியல் முறுகல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி இடம்பெற்றுள்ள A குழுவுக்கான லீக் ஆட்டங்கள் இலங்கையில் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னணியில் 2020 இல் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல் நீடித்து வருவதால் இப்போட்டித் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, குறித்த தொடரின் ஒரு குழுவிற்கான போட்டிகள் பாகிஸ்தானிலும், இந்திய அணி இடம்பெறவுள்ள குழுவிற்கான போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டாக்கின் டெஸ்ட் வாழ்க்கை கேள்விக்குறியில்..!
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான…..
அதேபோன்று, ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்றது. 2009இல் இலங்கை அணி மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை அடுத்து வெளிநாட்டு அணிகள் அங்கு சென்று விளையாடவில்லை. எனினும், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பாதுகாப்பு குழுவினால் வழங்கப்பட்ட உத்தரவாதத்தினை அடுத்து கடந்த 2 வருடங்களாக ஜிம்பாப்வே, பங்களாதேஷ் மற்றும் இலங்கை உள்ளிட்ட அணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அங்கு சென்று ஒருசில சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருந்தன.
2020ஆம் ஆண்டை நெருங்கும் போது பாகிஸ்தானில் சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கான சூழல் ஏற்படுமாயின், இந்தியாவை தவிர மற்றைய ஆசிய நாடுகள் அங்கு சென்று விளையாடுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<