பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷாநவாஸ் தஹானியின் காயம் மற்றும் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் மொஹமட் ரிஸ்வானின் MRI பரிசோதனை அறிக்கை தொடர்பிலும் அந்நாட்டு கிரிக்கெட் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுபர் 4 சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இம்முறை ஆசியக் கிண்ணத் தொடர் ஆரம்பமாவதற்கு முன் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான சஹீன் ஷா அப்ரிடி மற்றும் மொஹமட் வசீம் ஆகிய இருவரும் உபாதைக்குள்ளாகி போட்டித் தொடரிலிருந்து விலகினர். இதனையடுத்து அவர்களுக்குப் பதிலாக மொஹமட் ஹஸ்னைன் மற்றும் ஹசன் அலி ஆகிய இருவரும் மாற்றீடு வீரர்களாக அணியில் இணைந்து கொண்டனர்.
இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை ஷார்ஜாவில் நடைபெற்ற ஹொங் கொங் அணிக்கு எதிரான போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான ஷாநவாஸ் தஹானி உபாதைக்குள்ளாகினார்.
இதன்காரணமாக ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான சுபர் 4 சுற்று ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு வழங்குவதற்கு பாகிஸ்தான் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
- நஸீம் சாஹ்விற்கு உபாதை சிக்கல்கள் ஏற்படவில்லை – பாபர் அசாம்
- ஆசியக் கிண்ணத்திற்கான பாகிஸ்தான் குழாத்தில் ஹஸன் அலி
- இந்திய அணியிலிருந்து வெளியேறும் அனுபவ வீரர்!
இது இவ்வாறிருக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் மருத்துவக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஷாநவாஸ் தஹானி உபாதையில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், மருத்துவக் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் நடைபெற்ற சுபர் 4 சுற்றில் இந்திய அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இதற்கிடையில், குறித்த போட்டியில் விக்கெட் காப்பாளராக செயற்பட்ட போது உயரமாக வந்த பந்தை தடுக்க முயன்ற போது ரிஸ்வானின் காலில் உபாதை ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த வலியுடன் துடுப்பெடுத்தாடிய அவர், 71 ஓட்டங்களை எடுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
இதனிடையே, மொஹமட் ரிஸ்வானுக்கு இன்றைய தினம் (06) MRI பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அவரது ஸ்கேன் பரிசோதனை நாளை அவதானிக்கப்பட்டு அதன் பிறகு முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தற்போது அவர் நலமாக உள்ளார் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் மருத்துவக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரிஸ்வானின் காலில் ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை சற்று மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்படுவதால் ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து விலகும் சூழல் உருவாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஆசியக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் மொஹமட் ரிஸ்வான் முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 192 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 2 அரைச் சதங்களும் அடங்கும்.
இது இவ்வாறிருக்க, பாகிஸ்தான் அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானை செப்டம்பர் 7ஆம் திகதி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<