பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பியும், ஒருநாள் மற்றும் T20i கிரிக்கெட் போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக 2011 ஒருநாள் உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்ற போது பயிற்சியாளராக பணியாற்றிய வரும், தென்னாபிரிக்காவின் முன்னாள் துடுப்பாட்ட வீரருமான கேரி கிர்ஸ்டனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, அண்மையில் நிறைவடைந்த நியூசிலாந்து அணியுடனான T20i தொடரில் தற்காலிகமான பயிற்சியாளராக பணியாற்றிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் அசார் மஹ்மூத், பாகிஸ்தான் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20i அணிகளின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் மூவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் இரண்டு ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் நொக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறத் தவறியது. இதைத் தொடர்ந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன், அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னி மோர்க்கல், துடுப்பாட்ட பயிற்சியாளர் ஆண்ட்ரூ புட்டிக் ஆகியோர் நீக்கப்பட்டனர். மேலும் பாபர் அசாமும் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து சஹீன் ஷா அப்ரிடி ஒருநாள், T20i அணிகளின் தலைவராகவும், ஷான் மசூத் டெஸ்ட் அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் வீரர் மொஹமட் ஹபீஸ் இயக்குநராக செயல்பட்டார். ஆனால் அந்த தொடரில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடiர் 3-0 எனவும் T20i தொடரை 4-1 எனவும் இழந்ததால் மொஹமட் ஹபீஸ் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சஹீன் ஷா அப்ரிடி தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில் மீண்டும் பாபர் அசாம் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
- பாகிஸ்தான் T20I அணியிலிருந்து வெளியேறிய ரிஸ்வான்\
- பாகிஸ்தான் T20I அணிக்கு திரும்பும் மொஹமட் ஆமிர்!
- பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராகும் முஷ்டாக் அஹ்மட்
இதைத் தொடர்ந்து வெற்றிடமாக இருந்த பாகிஸ்தான் அணிக்கு முழுநேர பயிற்சியாளரை நியமிக்கும் பணிகளை அந்நாட்டு கிரிக்கெட் சபை தீவிரப்படுத்தியது. இதன் அடிப்படையில் தற்போது கேரி கிரிஸ்டனும், கில்லெஸ்பியும் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் மே மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடவுள்ளது. எனவே, அந்த தொடரில் இருந்து கேரி கிர்ஸ்டன் பாகிஸ்தான் அணியுடன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்ற ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆலோசகராகவும், துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் கேரி கிர்ஸ்டன் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில் A பிரிவில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் இந்தியா, அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<