இங்கிலாந்து தொடரில் பங்கெடுக்கும் பாகிஸ்தான் டெஸ்ட் அணி தமது 16 வீரர்கள் குழாத்தில் இருந்து சுழல்பந்துவீச்சாளர்களான ஷாஹிட் மஹ்மூட் மற்றும் நோமன் அலி ஆகியோரினை விடுவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
>>CPL சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த சென். லூசியா கிங்ஸ்!
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. அந்தவகையில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (07) தொடக்கம் முல்டானில் நடைபெற்று வரும் நிலையில் தொடரின் முதல் போட்டிக்கான பாகிஸ்தான் குழாத்தில் இருந்தே ஷாஹிட் மஹ்மூட் மற்றும் நோமன் அலி ஆகியோர் விடுவிக்கப்பட்டிருப்பதாக கிரிக்பஸ் செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வீரர்களில் ஷாஹிட் மஹ்மூட் இங்கிலாந்து பாகிஸ்தானுக்கு 2022ஆம் ஆண்டு டெஸ்ட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பாகிஸ்தானை பிரதிநிதித்துவம் செய்ததோடு, நோமன் அலி கடந்த ஆண்டின் இறுதி வரை பாகிஸ்தானுக்காக தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வீரராக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அணியில் எஞ்சியிருக்கும் வீரர்களுக்கு சரியான பயிற்சி ஆதரவினை தமது பயிற்சியாளர்கள் குழாம் மூலம் வழங்குவதனை காரணமாகக் கொண்டே சுழல்பந்துவீச்சாளர்கள் இருவரினையும் நீக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை முல்டானில் நடைபெற்று வரும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவில் முதலில் துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணியானது 328 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.