நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான 15 பேர்கொண்ட குழாத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தை பொருத்தவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அஷார் அலிக்கு பதிலாக கம்ரான் குலாம் இணைக்கப்பட்டுள்ளார்.
>> நொக்-அவுட் சுற்றில் இருந்து கோல் கிளேடியேட்டர்ஸ் அணி வெளியேற்றம்
கம்ரான் குலாம் ஒரு வருடத்துக்கு முன்னர் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் இணைக்கப்பட்டிருந்தாலும், விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், தற்போது உள்ளூர் போட்டிகளில் சிறந்த ஓட்ட பிரதிகளை கொண்டுள்ள இவருக்கு மீண்டும் அழைப்பு கிடைத்துள்ளது.
அதேநேரம் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இறுதியாக விளையாடிய ஹசன் அலி மீண்டும் குழாத்துக்குள் வரவழைக்கப்பட்டுள்ளார். இவருடன் உபாதையிலிருந்து மீண்டுள்ள நசீம் ஷா அணியில் இணைந்துக்கொண்டுள்ளார்.
எனினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் உபாதைக்குள்ளாகிய ஹரிஸ் ரவூப் மற்றும் சஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் உபாதை குணமடையாத காரணத்தால் அணியில் இடம்பெறவில்லை.
இதேவேளை இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இணைக்கப்பட்டிருந்த பஹீம் அஷ்ரப் மற்றும் மொஹமட் அலி ஆகியோர் நியூசிலாந்து அணிக்கு எதிரான குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
>> இந்திய தொடரில் இணையும் இளம் வீரர்கள்; முன்னணி வீரர்கள் நீக்கம்? | Sports RoundUp – Epi 228
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி கராச்சியில் ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் திகதி முல்தானில் ஆரம்பமாகவுள்ளது.
பாகிஸ்தான் டெஸ்ட் குழாம்
பாபர் அஷாம் (தலைவர்), அப்துல்லாஹ் சபீக், அப்ரர் அஹ்மட், ஆகா சல்மான், ஹசன் அலி, இமாம் உல்-ஹக், கம்ரான் குலாம், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் வசீம், நசீம் ஷா, நவுமான் அலி, சர்பராஷ் அஹ்மட், சௌத் சகீல், ஷான் மசூட், ஷஹிட் மஹ்மூட்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<