பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் திரும்பும் ஃபக்கர் ஜமான்

ICC Champions Trophy 2025

40
pakistan squad

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஐசிசியின் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 19ஆம் திகதி முதல் மார்ச் 9ஆம் திகதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. ஆனால், இந்திய அணி விளையாடுகின்ற போட்டிகள் மாத்திரம் துபாயில் நடைபெறுகிறது. இதனிடையே, சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், போட்டியை நடாத்தும் பாகிஸ்தான் அணி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான மொஹமட் ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று (31) அறிவித்துள்ளது.

இறுதியாக கடந்த 2017இல் நடைபெற்ற ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடிய 3 வீரர்கள் மாத்திரம் தான் இம்முறை சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது கணுக்காலில் காயமடைந்த சைம் அயூப், அதற்கான சிகிச்சையில் உள்ளதால் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இவர் விளையாடது அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக இருந்தாலும், அவருக்குப் பதில் பாபர் அசாம் அல்லது சவுத் சகில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்க கூடும் என்று அந்நாட்டு தேர்வுக்குழு உறுதிப்படுத்தியுள்ளளது.

அதேபோல, இறுதியாக நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஃபக்கர் ஜமான் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். காயம் காரணமாக கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் பாகிஸ்தான் அணியில் இவர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அண்மைக்கலாமாக பாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறி வந்த ஃபஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா மற்றும் சௌத் ஷகீல் ஆகியோர் இத்தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.

இது தவிர, அண்மைக்காலங்களில் பாகிஸ்தான் ஒருநாள் அணியில் விளையாடி வந்த இர்பான் கான் மற்றும் சுஃபியான் முகீம் ஆகிய இருவருக்கும் இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. மேலும், முன்வரிசை துடுப்பாட்ட வீரர் அப்துல்லா ஷபீக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக இந்த தொடரை தவறவிட்டுள்ளார்.

இதுதவிர்த்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப் உள்ளிட்டோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரானது இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், கராச்சியில் நடைபெறுகின்ற முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. அதேபோல, இரண்டாவது போட்டி துபாயில் 23ஆம் திகதி இந்திய அணிக்கு எதிராகவும், மூன்றாவது போட்டி 27ஆம் திகதி ராவல் பிண்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் அணி விபரம்

மொஹமட் ரிஸ்வான் (தலைவர்), பாபர் அசாம், ஃபக்கர் ஜமான், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தய்யப் தாஹிர், ஃபஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, அப்ரார் அஹ்மட், ஹாரிஸ் ரவூப், மொஹமட் ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அப்ரிடி.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<