ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தெரிவுக் குழுவின் தலைவர் இன்சமாம் உல் ஹக், அவ்வணியின் பயிற்சியாளர் மிக்கி ஆதர் மற்றும் அணித் தலைவர் சர்பராஸ் அஹமட் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், அனுபவமிக்க வீரருமான அசார் அலிக்கு ஓய்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த சில தினங்களான உபாதையினால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அசார் அலி, மீண்டும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை ஒருநாள் குழாம் இதுதான்
தேசிய அணியின் தெரிவாளர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக…
கடந்த வருடம் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒரு நாள் தொடரின் பிறகு அணித் தலைமையிலிருந்து அசார் அலி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து மேற்கிந்திய சுற்றுப்பயணத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்ட அசார் அலி, சம்பியன் கிண்ணத் தொடரில் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியிருந்தார்.
அத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய அசார் அலி, இந்திய அணியுடனான இறுதிப் போட்டியில் அரைச்சதம் குவித்து பாகிஸ்தான் அணிக்கு முதற்தடவையாக சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொடுக்கவும் முக்கிய காரணமாக இருந்தார். எனினும், தெரிவுக்குழுத் தலைவராக இன்சமாம் உல் ஹக் தொடர்ந்து அசார் அலியை அணியிலிருந்து நீக்கி வருவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அசார் அலிக்குப் பதிலாக, பாகிஸ்தான் உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற 21 வயதான இளம் வீரர் இமாம் உல் ஹக் முதற்தடவையாக பாகிஸ்தான் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இடது கை துடுப்பாட்ட வீரரான இமாம், பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட ஜாம்பாவானும், தற்போதைய தெரிவுக் குழுவின் தலைவருமான இன்சமாம் உல் ஹக்கின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதிகளவு ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ள இமாம் உல் ஹக், நடப்பாண்டு உள்ளூர் போட்டிகளில் இரட்டைச் சதம் மற்றும் 3 சதங்கள் உள்ளடங்கலாக 49.88 என்ற சராசரியுடன் 848 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன் இதுவரை 31 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள இமாம், 4 சதங்கள் உள்ளடங்கலாக 1,744 ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சுப்பர் லீக் அணிகளிலிருந்து நட்சத்திர வீரர்கள் விடுவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படுகின்ற 3ஆவது பாகிஸ்தான் சுப்பர்…
மேலும், அண்மைக்காலமாக டெஸ்ட் அணியில் இடம்பெறாத அனுபவமிக்க வீரரான மொஹமட் ஹபீஸ் மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளதுடன், சம்பியன்ஸ் கிண்ணத்தில் இடம்பெற்ற வஹாப் றியாஸுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஜுனைத் கான் பாகிஸ்தான் அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் அணித் தேர்வு குறித்து பாகிஸ்தான் தெரிவுக்குழுவின் தலைவர் இன்சமாம் உல் ஹக் கருத்து வெளியிடுகையில், ”சம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற அசார் அலிக்கு உபாதை காரணமாக ஓய்வினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் காரணமாக உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற இளம் வீரரொருவருக்கு பாகிஸ்தான் ஒரு நாள் அணியில் வாய்ப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, 21 வயதுடைய இமாம் உல் ஹக் முதற்தடவையாக அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். கணுக்கால் காயம் காரணமாக வஹாப் ரியாஸிற்கு ஓய்வினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் ஒரு நாள் குழாம்
சர்பராஸ் அஹமட் (அணித் தலைவர்), அஹமட் ஷேசாத், பக்கர் ஷமான், மொஹமட் ஹபீஸ், பாபர் அசாம், சொஹைப் மலிக், இமாத் வசீம், சதாப் கான், பாஹிம் அஷ்ரப், ஹஸன் அலி, மொஹமட் ஆமிர், ரும்மான் ரயிஸ், ஜுனைத் கான், ஹரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக்.