அவுஸ்திரேலியா போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் ஆப்கானிஸ்தானுடனான கிரிக்கெட் தொடர்களை இரத்துச் செய்யாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) தலைவரான நஜாம் சேத்தி குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சிப்போட்டிக்கான SLC பதினொருவர் குழாம் அறிவிப்பு
தலிபான்கள் மூலம் பெண்களின் உரிமைகள் ஆப்கானிஸ்தானில் மீறப்படுவதாக குற்றம் சாட்டிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுடன் மார்ச் மாதம் விளையாடவிருந்த ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக கடந்த 12ஆம் திகதி அறிவித்திருந்தது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த தொடர் இரத்துச் செய்யப்பட்டது பல விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் ஆப்கான் கிரிக்கெட் வீரர்களும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவினை பின்பற்றி பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடும் கிரிக்கெட் தொடரினை இரத்துச் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவரான நஜாம் சேத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவ்வாறு செய்யாது எனக் கூறிப்பிட்டிருப்பதோடு, ”கிரிக்கெட் விளையாட்டினையும் அரசியலையும் வேறுவேறாகப் பார்க்க வேண்டும்“ எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
அத்துடன் அரசியலுடன் விளையாட்டை சேர்ப்பது கூடாது என மீண்டும் வலியுறுத்திய நஜாம் சேத்தி மற்ற நாட்டின் அரசியல் விடயங்களுக்குள் தலையிடுவது சரியல்ல எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
”(மற்ற நாட்டின் அரசியல்) எங்களுக்கு தேவையானது அல்ல, ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களுக்குள் போவதற்கு நாங்கள் விரும்பவில்லை. நான் கிரிக்கெட்டும் அரசியலும் சேர்க்கப்படக்கூடாது என நம்புகின்றேன். எனவே இந்த தொடர் பற்றிய இறுதி முடிவு பாகிஸ்தான் அரசின் முடிவுடன் சேர்த்து எடுக்கப்படவிருக்கின்றது. நான் இந்த தொடருக்கான அனுமதி கிடைக்கும் என நம்புகின்றேன்.”
T20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய வஹாப் ரியாஸ்
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் ஒருநாள் போட்டிகளாக நடைபெறவிருந்ததோடு, அது ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்குகளிலும் அடங்குகின்றது. ஆனால் ஒருநாள் சுபர் லீக் புள்ளிகள் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்த உலகக் கிண்ணத்திற்கு ஏற்கனவே தெரிவாகியிருப்பதன் காரணமாக, பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையிலான ஒருநாள் தொடர் T20 போட்டிகளாக மாற்றப்பட்டிருக்கின்றது.
அந்தவகையில் இந்த கிரிக்கெட் தொடர் மார்ச் மாத இறுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறுகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<