பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, தமது இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கான 29 வீரர்கள் அடங்கிய பாகிஸ்தான் வீரர்கள் குழாத்தினை இன்று (12) வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் விளையாடவிருக்கின்றது.
>> இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய ஆமிர், ஹரிஸ் சொஹைல்
அதன்படி, இந்த சுற்றுப் பயணத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியின் 29 பேர் அடங்கிய வீரர்கள் குழாமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், உலகில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் குறையாத காரணத்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகள் ஆரம்பமாக ஒரு மாதத்திற்கு முன்னரே, இங்கிலாந்து சென்று அங்கே தனிமைப்படுத்தல் முகாம்களில் பங்கெடுத்த பின்னர் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதோடு அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் குழாம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகள் அனைத்தும் நிறைவடையும் வரை இங்கிலாந்திலேயே தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இடம்பெறும் டெஸ்ட் போட்டிகளின் போது அஷார் அலி பாகிஸ்தான் அணியினை வழிநடாத்த T20 போட்டிகளில் பாபர் அசாம் தலைவராக செயற்படவுள்ளார்.
இதேநேரம், இந்த சுற்றுப் பயணத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 36 வயது நிரம்பிய வேகப்பந்துவீச்சாளரான சொஹைல் கானுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றது. கடந்த 2016ஆம் ஆண்டிலேயே இறுதியாக பாகிஸ்தானை சர்வதேச போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்த சொஹைல் கான் அண்மையில் முதல்தர போட்டிகளுடன் சேர்த்து, பாகிஸ்தான் சுபர் லீக் தொடரிலும் சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், இறுதியாக நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானின் இளம் நட்சத்திர துடுப்பாட்டவீரராக மாறிய ஹைடர் அலிக்கு இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் மூலம் தனது நாட்டின் சிரேஷ்ட கிரிக்கெட் அணியினை பிரதிநிதித்துவம் செய்கின்ற வாய்ப்பு முதல் முறையாக கிடைத்துள்ளது.
>> சத்திரசிகிச்சை செய்யத் தவறியுள்ள ஹஸன் அலி
ஹைடர் அலி ஒரு பக்கம் இருக்க, இதுவரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதிலும் விளையாடாத சகலதுறை வீரர் காசிப் பட்டிக்கும் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த வீரர்கள் தவிர பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய ஒப்பந்தத்தினைப் பெற்றுக் கொண்ட வீரர்கள் பலர் வழமை போன்று இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் வாய்ப்பினை பெற்றிருக்கின்றனர். இவர்களோடு பாஹிம் அஷ்ரப், பவாட் அலாம், இம்ரான் கான், குஷ்டில் சாஹ், மொஹமட் ஹபீஸ் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகிய வீரர்கள் மூலம் பாகிஸ்தான் வீரர்கள் இன்னும் பலப்படுத்தப்படுகின்றது.
அதேநேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மூலம் பிலால் ஆசிப், இம்ரான் பட், மூசா கான் மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கான மேலதிக வீரர்களாக பெயரிடப்பட்டிருக்கின்றனர்.
இதேவேளை, அனுபவ வீரர்களான ஹாரிஸ் சொஹைல், மொஹமட் ஆமிர் ஆகியோர் சொந்த காரணங்களை காட்டி இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இருந்து விலகியிருப்பதோடு, ஹஸன் அலி முதுகு உபாதை காரணமாக இந்த சுற்றுப் பயணத்தில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்திருக்கின்றார்.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கான கொரோனா பரிசோதனைகள் எதிர்வரும் 20ஆம், 25ஆம் திகதிகளில் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகளில் வீரர்கள் யாருக்காவது வைரஸ் தொற்று இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக தெரிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் மேலதிக வீரர்கள் மூலம் பிரதியிப்படவுள்ளனர்.
இதேநேரம், இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக யூனூஸ் கான் முதல்முறையாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். யூனூஸ் கான் தவிர பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக்கும், பந்துவீச்சு பயிற்சியாளராக வகார் யூனூஸூம், சுழற்பந்து பயிற்சியாளராக சக்லைன் முஸ்தாக்கும் காணப்படுகின்றனர்.
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிகள் ஜூலை மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதோடு, T20 போட்டிகள் ஒகஸ்ட் 29ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளன.
பாகிஸ்தான் குழாம் – ஆபித் அலி, பக்கார் சமான், இமாம்-உல்-ஹக், ஷான் மசூத், அஷார் அலி, பாபர் அசாம், அசாத் சபீக், பவாட் அலாம், ஹைடர் அலி, இப்திகார் அஹ்மட், குஷ்டில் சாஹ், மொஹமட் ஹபீஸ், சொஹைப் மலீக், மொஹமட் ரிஸ்வான், சர்பராஸ் அஹ்மட், பாஹிம் அஷ்ரப், ஹரிஸ் ரௌப், இம்ரான் கான், மொஹமட் அப்பாஸ், மொஹமட் ஹஸ்னைன், நஸீம் சாஹ், சஹீன் சாஹ் அப்ரிடி, சொஹைல் கான், உஸ்மான் சின்வாரி, வஹாப் ரியாஸ், இமாத் வஸீம், காசிப் பட்டி, சதாப் கான், யாசிர் சாஹ்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<