அவுஸ்திரேலியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீச தவறிய பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 360 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தானை தொடர்ந்து 15ஆவது முறையாக சொந்த மண்ணில் அந்த அணி வெற்றி கண்டது.
இந்த நிலையில். பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு ஓவர் குறைவாக பந்துவீச தவறியுள்ளது. இதனை அவதானித்த நடுவர்கள் போட்டி மத்தியஸ்தரிடம் முறையிட்ட பின்னர், போட்டி மத்தியஸ்தரான ஜவகல் ஸ்ரீநாத் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
- டெஸ்ட் தொடரின் நடுவே பயிற்சிப் போட்டியில் ஆடவுள்ள பாகிஸ்தான்
- இந்திய டெஸ்ட் அணியிலிருந்து விலகிய இளம் வீரர்
நடுவர்கள் முறையீட்டின் அடிப்படையிலும், பாகிஸ்தான் அணித் தலைவர் ஷான் மசூத்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலும், குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அதுதவிர, பாகிஸ்தான் அணிக்கு 2023-25 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஏற்கனவே பெற்றிருந்த புள்ளிகளில் 2 புள்ளிகள் குறைக்கப்படுவதாகவும் ஐசிசி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் ஏற்கனவே பெற்றிருந்த 24 புள்ளிகளில் பாகிஸ்தான் தற்போது 2 புள்ளிகளை இழந்துள்ளது.
இதன் காரணமாக புள்ளிப் பட்டியலில் 66.67 சதவீதத்திலிருந்து தற்போது 61.11 சதவீத புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள பாகிஸ்தான் அணி 2ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது.
அத்துடன், 2023-25 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பயணத்தில் பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி மெல்பேர்னில் ஆரம்பமாகவுள்ளது.
>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<