பௌன்ஸர் பந்து தாக்கி பாக். வீரர் சுபைர் அஹமட் மரணம்

424
Zubair Ahmed
Image courtesy - PCB Official Twitter

போட்டியின்போது பௌன்ஸர் பந்தொன்று தாக்கி பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர் சுபைர் அஹமட் மரணித்திருப்பது கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சுபைர் அஹமட் தனது சொந்த ஊரில் குவெட்டா பீயர்ஸ் அணிக்காக A நிலை மற்றும் T-20 போட்டிகளில் ஆடி வந்தார். அந்த கழகத்திற்காக ஓகஸ்ட் 14 ஆம் திகதி நடந்த போடியின்போதே பந்து அவரது தலையை தாக்கியுள்ளது.  

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இந்த பரிதாபச் செய்தியை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளது. இந்த தகவல் உலகெங்கும் உள்ள விளையாட்டு ரசிகர்களை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.  

முன்னாள் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூஸ் சிட்னி மைதானத்தில் ஷெபில்ட் ஷீல்ட் போட்டியின்போது பந்து தாக்கி மரணித்த சம்பவம் நிகழ்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே இந்த பரிதாபம் மீண்டும் இடம்பெற்றுள்ளது. ஹியூஸின் மரணத்தை அடுத்து விளையாட்டின் பாதுகாப்பு விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தப்பது.   

அவுஸ்திரேலிய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் டார்வினில் நடந்த பயிற்சிப் போட்டியின்போது ஜோஷ் ஹேசில்வுட்டின் பௌன்ஸர் பந்தினால் தாக்கப்பட்டு சில மணி நேரங்களுக்குள்ளேயே பௌன்ஸர் பந்தொன்றால் சுபைரின் மரணம் நிகழ்ந்துள்ளது.

குவெட்டா பீயர்ஸ் அணிக்காக சுபைர் அஹமட் ஆடிய நான்கு போட்டிகளில், 2014ஆம் ஆண்டு நடந்த T-20 ஆட்டம் ஒன்றில் அவர் ஆட்டமிழக்காது 111 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பந்து தாக்கியபோது அவர் தலைக்கவசம் (Helmet)  அணிந்திருந்தாரா, இல்லையா என்பது உடன் உறுதி செய்யப்படவில்லை.