இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய ஆமிர், ஹரிஸ் சொஹைல்

346

இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் குழாத்திலிருந்து வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிர் மற்றும் ஹரிஸ் சொஹைல் ஆகியோர் வெளியேறியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 

மொஹமட் ஆமிரின் மனைவி இரண்டாவது குழந்தையை பிரசவிக்க உள்ள காரணத்தினால் மொஹமட் ஆமிர் தொடருக்கான அணியிலிருந்து விலகுவதாகக் கேட்டுக்கொண்டுள்ளதுடன், ஹரிஸ் சொஹைல் தனிப்பட்ட காரணங்களுக்காக அணியிலிருந்து விலகியுள்ளார். 

T20 உலகக் கிண்ணம் குறித்த அறிவிப்பு ஜூலையில்!

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரானது எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக 4 மாதங்கள் சர்வதேச கிரிக்கெட் முடங்கியிருந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. இதனையடுத்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடர் நடைபெறவுள்ளது. 

ஹரிஸ் சொஹைல் மற்றும் மொஹமட் ஆமிர் ஆகியோர் இதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து ஏற்கனவே, விலகியிருந்தனர். இந்த வரிசையில் மீண்டும் அவர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்தும் வெளியேறியுள்ளனர். 

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் 2020-2021ம் ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தத்தில் மொஹமட் ஆமிர் நீக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் அணியின் T20 குழாமில் தொடர்ச்சியாக இணைக்கப்பட்டு வருகின்றார். அதேநேரம், ஹரிஸ் சொஹைல் பாகிஸ்தான் டெஸ்ட் மற்றும் T20 குழாம்களில் தொடர்ச்சியாக விளையாடி வருகின்றார். 

இங்கிலாந்து சுற்றுத் தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 29 வீரர்கள் மற்றும் 14 பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உதவி ஊழியர்களை அனுப்பிவைக்கவுள்ளது. இந்த உதவி ஊழியர்களுக்கான குழாத்தில் அண்மையில் துடுப்பாட்ட மற்றும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கான பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட யூனுஸ் கான் மற்றும் முஷ்டாக் அஹமட் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர். 

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று T20 போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<