ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான (2023) ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமத்தை பாகிஸ்தான் கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் சபை தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
இம்தியாஸ் ஸ்லாஷாவின் பிரகாசிப்புடன் இலங்கைக்கு 2வது வெற்றி
இதன்காரணமாக ஆசியக் கிண்ணத்தை நடத்துவதற்கான புதிய திட்டம் ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உருவாக்கியது. அதன்படி இந்திய அணியின் போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கும், ஏனைய போட்டிகளை பாகிஸ்தானில் நடத்துவதற்குமான திட்டமொன்றினை (hybrid model) ஆசியக் கிரிக்கெட் சபையிடம் சமர்ப்பித்தது.
எனினும் குறிப்பிட்ட இந்த திட்டத்துக்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைகள் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டு ஆசியக் கிரிக்கெட் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. அதுமாத்திரமின்றி ஐக்கிய அரபு இராச்சியத்தில் அதிகமான வெப்ப காலநிலை நிலவுவதால் அங்கு விளையாடுவதற்கும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.
இவ்வாறான நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜிமுல் சேதியுடன் டுபாயில் மேற்கொண்ட சந்திப்பில், தொடரின் உரிமத்தை பாகிஸ்தான் வைத்திருக்க, போட்டித்தொடரை இலங்கையில் நடத்துவதற்கான ஆலோசனை ஆசியக் கிரிக்கெட் சபையால் வழங்கப்பட்டது.
எனினும் இலங்கையில் நடத்துவதற்கான ஆலோசனைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டது மாத்திரமின்றி, தங்களுடைய திட்டம் (hybrid model) ஏற்கப்படாவிடின் தொடரை 2018 மற்றும் 2020ம் ஆண்டுகள் போன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தவேண்டும் என அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜாம் சேதி குறிப்பிடுகையில்,
“ஆசியக் கிண்ணத்துக்காக பாகிஸ்தான் முன்மொழிந்திருந்த hybrid model திட்டத்தை ஆசியக் கிரிக்கெட் சபை ஏற்க வேண்டும். மேலும் அணிகள் பாகிஸ்தானுக்கு வருகைத்தர மறுத்தால், 2018 மற்றும் 2020ஆம் ஆண்டுகள் போன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் போட்டிகளை நடத்த வேண்டும்.
செப்டம்பரில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என இந்திய கிரிக்கெட் சபை, ஆசிய கிரிக்கெட் சபைக்கு கூற முயற்சித்திருக்கிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் சபை 2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின் ஒரு பகுதியை செப்டம்பர்–நவம்பர் காலப்பகுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தியிருந்தது” என சுட்டிக்காட்டினார்.
கடந்த பெப்ரவரி மாதம் ஆசியக் கிண்ணத்தை நடத்துவதற்கான கோரிக்கையை இலங்கை கிரிக்கெட் சபையானது, ஆசியக் கிரிக்கெட் சபையிடம் முன்வைத்திருந்தது. எனினும் குறித்த இந்த கோரிக்கையை பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபைகள் நிராகரித்திருந்தன.
இவ்வாறான நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்வைத்துள்ள திட்டத்தினை ஆசியக் கிரிக்கெட் சபை நிராகரிக்க முடியாது எனவும், இலங்கையில் ஆசியக்கிண்ணத்தை நடத்துவதற்கான ஆதரவுகளை இந்திய கிரிக்கெட் சபை மறைமுகமாக வழங்கி வருவதை பார்த்து ஆச்சரியப்படுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆசியக் கிண்ணம் நடத்தப்படாவிட்டால், குறித்த காலப்பகுதியில் 3 அல்லது 4 அணிகள் பங்கேற்கும் தொடரொன்றை நடத்துவதற்கான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அதிகாரிகளிடம் நஜாம் சேதி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<