ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் நாளை (10) இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கவிருக்கும் நிலையில் இப்போட்டி குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர்களில் ஒருவராகவும் காணப்படும் மிக்கி ஆர்தர் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
>> தோல்வியுடன் சேர்த்து இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபாராதம்
இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி நாளை ஹைதராபாதில் நடைபெறுகின்றது. இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடக்கம் நவம்பர் 2021ஆம் ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் அணியினை பயிற்றுவித்திருந்த மிக்கி ஆத்தர், இப்போட்டியில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கெட் அணி பலம் வாய்ந்த ஒன்று எனக் குறிப்பிட்டிருந்ததோடு, இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் திட்டங்களை சரியாக செயற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
”ஆம் (இலங்கை பயிற்சியாளராக இருந்த காரணத்தினால்), எனக்கு அவர்களது பலம், பலவீனங்கள் தெரியும். எனவே நாம் அவர்களுக்காக அனைத்து திட்டங்களையும் செயற்படுத்த வேண்டும். அவர்கள் ஆபத்தான கிரிக்கெட் அணியாக காணப்படுகின்றனர். எனவே நாங்கள் அவர்களை வீழ்த்துவதற்கு எங்களது சிறந்ததனை வெளிப்படுத்த வேண்டும்.”
பாகிஸ்தான் இம்முறை உலகக் கிண்ணத்தில் தமது முதல் போட்டியில் நெதர்லாந்து கிரிக்கெட் அணியினை எதிர் கொண்டிருந்ததோடு குறிப்பிட்ட போட்டியில் அவ்வணியின் முன் வரிசை தடுமாறிய போதும் மத்திய வரிசை வீரர்களான சௌத் சகீல் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோரது ஆட்டத்தோடு அவ்வணி 286 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பின்னர் குறித்த போட்டியில் பாகிஸ்தான் அணியானது நெதர்லாந்தின் விக்கெட்டுக்கள் அனைத்தினையும் 205 ஓட்டங்களுக்கு வீழ்த்தி 81 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது.
>> சாதனைப் பதிவுகளுடன் இலங்கையை வீழ்த்திய தென்னாபிரிக்கா
இப்போட்டியின் வெற்றி குறித்து கருத்து வெளியிட்டிருந்த மிக்கி ஆர்தர், ”நான் முதல் போட்டியில் எமது அணி மிகச் சிறந்த ஆட்டம் ஒன்றினை வெளிப்படுத்தாத போதிலும் எமது முதல் வெற்றியினை இரசித்திருந்தேன். எங்களுக்கு முக்கிய தருணம் ஒன்றில் வெற்றி பெறக் கூடியதாக காணப்பட்டதோடு, குறித்த தருணத்தில் எங்களது வீரர்களும் எமக்காக கை கொடுத்திருந்தனர்.”
இதேநேரம் கிடைத்திருக்கும் மேலதிக தகவல்கள் நாளை (09) பாகிஸ்தான் அணியானது நாளைய போட்டியில் தமது முன்வரிசையில் சில மாற்றங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக குறிப்பிட்டிருக்கின்றன.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<