பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பந்து ஓவர்களை வீசுவதற்கு தாமதித்த காரணத்திற்காக இரண்டு அணிகளினதும் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் அபாரதாமாக விதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
>>இலங்கை தொடரில் முன்னணி வேகப்பந்துவீச்சாளரை இழக்கும் இங்கிலாந்து
குறித்த இந்தப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 6 ஓவர்களை வீச தவறிய பாகிஸ்தான் அணிக்கு 6 ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளும், வீரர்களுக்கு போட்டிக்கட்டணத்தில் 30 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது.
அதேநேரம் பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 3 ஓவர்களை வீச தவறியதன் காரணமாக அந்த அணிக்கு 3 டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் மற்றும் 15 சதவீதம் போட்டிக்கட்டணத்தில் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு மாத்திரமின்றி அந்த அணியின் சகலதுறை வீரர் சகீப் அல் ஹஷனுக்கு தனிப்பட்ட ரீதியில் ஐசிசி அபராதம் விதித்துள்ளது. குறித்த இந்தப் போட்டியில் மொஹமட் ரிஸ்வான் துடுப்பெடுத்தாடும் போது, அவரை அச்சுறுத்தும் வகையில் பந்தை வீசியெறிந்த குற்றச்சாட்டுக்காக சகீப் அல் ஹஷனுக்கு போட்டிக்கட்டணத்தில் 10 சதவீதமும், ஒரு தரமிறக்கல் புள்ளியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை பொருத்தவரை பங்களாதேஷ் அணி 40 சதவீத வெற்றிகளுடன் ஆறாவது இடத்தையும், பாகிஸ்தான் அணி 30.56 சதவீத வெற்றிகளுடன் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<