ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட குழாத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில், மூன்று T20I போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் அசாம் கான் இணைக்கப்பட்டுள்ளார். இவரின் இணைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அனுபவ வீரரான சர்பராஸ் அஹமட் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ரவி சாஸ்திரிக்கு கொவிட்-19 தொற்று; பலர் தனிமைப்படுத்தலில்
பாகிஸ்தான் அணியின் தலைவராக பாபர் அசாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், உப தலைவராக சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் சதாப் கான் பெயரிடப்பட்டுள்ளார். மத்தியவரிசையை பலப்படுத்தும் முகமாக ஆசிப் அலி மற்றும் குஷ்தில் ஷா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதுடன், பக்ஹர் ஷமான் துரதிஷ்டவசமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சொஹைப் மக்சூட் எந்த இடத்திலும் துடுப்பெடுத்தாடுவதற்கான திறனைக்கொண்டுள்ள நிலையில், பக்ஹர் ஷமானின் இடம் பறிபோயுள்ளது. எவ்வாறாயினும், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், அனுபவ சகலதுறை வீரர்களான மொஹமட் ஹபீஸ் மற்றும் இமாட் வசீம் ஆகியோரும் குழாத்தில் இடத்தை தக்கவைத்துள்ளனர்.
உலகக் கிண்ண குழாத்தில் பாகிஸ்தானின் அதிக அனுபவமிக்க வீரரான சொஹைப் மலிக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், மேலதிக வீரர்களுக்கான பட்டியலிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வேகப் பந்துவீச்சாளர்களாக ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, சஹீன் அப்ரிடி, மொஹமட் வசீம் ஜூனியர் மற்றும் மொஹமட் ஹஸ்னைன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், பாகிஸ்தான் குழாத்துடன், மேலதிக வீரர்களாக பக்ஹர் ஷமான், உஸ்மான் காதீர் மற்றும் சஹநவாஸ் தஹானி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் குழாம்
பாபர் அசாம் (தலைவர்), சதாப் கான் (உப தலைவர்), அசிப் அலி, அசாம் கான், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, இமாட் வசீம், குஸ்தில் ஷா, மொஹமட் ஹபீஸ், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் வசீம் ஜூனியர், சஹீன் அப்ரிடி, சொஹைப் மக்சூட்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…