தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இரு அணிகளினதும் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு தென்னாபிரிக்க அணியுடன் மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது.
இமாம் உல் ஹக்கின் சதம் வீண்; ஒரு நாள் தொடரில் தென்னாபிரிக்கா முன்னிலையில்
முதல் தொடரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி 3-0 எனும் அடிப்படையில் பாகிஸ்தான் அணியை வைட் வொஷ் செய்திருந்தது.
அடுத்த தொடரான ஒருநாள் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்ற நிலையில், முதல் மூன்று ஒருநாள் போட்டிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற அடுத்த இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி அடுத்தடுத்து வெற்றி பெற்று தொடரில் 2-1 எனும் அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள சுற்றுப் பயணத்தின் இறுதி தொடரான டி20 தொடரில், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கின்ற பாகிஸ்தான் அணி தரவரிசையில் ஐந்தாமிடத்தில் இருக்கின்ற தென்னாபிரிக்க அணியை மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொள்ளவுள்ளது.
இதற்கான இரு அணிகளினது டி20 குழாம் உத்தியோகபூர்வமாக அந்நாட்டு கிரிக்கெட் சபைகளின் தேர்வுக் குழுவின் தலைவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணியின் 15 பேர் கொண்ட டி20 குழாம் இன்று (26) அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தேர்வுக் குழுவின் தலைவரான இன்ஸமாம் உல் ஹக்கினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து தொடர்களில் இரு அணிகளையும் வைட் வொஷ் செய்த பாகிஸ்தான் அணியிலிருந்து ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இடது கை வேகப்பந்துவீச்சாளரான வகாஸ் மசூத் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அதே இடது கை வேகப்பந்துவீச்சாளரான முஹம்மட் ஆமிர் டி20 அணிக்கு 7 மாத கால இடைவெளிக்கு பின்னர் அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் (2018) 19 டி20 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் அணி அதில் இரண்டே இரண்டு போட்டிகளில் மாத்திரம் தோல்வியுற்று 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தற்போது தொடர்ச்சியாக 11 டி20 தொடர்களை கைப்பற்றியுள்ள பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரையும் கைப்பற்றும் வகையில் பலமான அணியை அறிவித்துள்ளது. அத்துடன் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வெற்றி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் அரங்கில் விரைவாக ஆயிரம் ஓட்டங்களை கடந்தார் இமாம் உல் ஹக்
சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான டி20 அணியில் பக்ஹர் சமான், முஹம்மட் ஹபீஸ், சஹிப்சடா பர்ஹான், பாபர் அசாம், சுகைப் மலிக், ஹூஸைன் தலத், சதாப் கான், சஹீன் அப்ரிடி, உஸ்மான் சென்வாரி, முஹம்மட் ஆமிர், ஹசன் அலி, இமாட் வசீம், பஹீம் அஸ்ரப், ஆசிப் அலி
- தென்னாபிரிக்கா
தரவரிசையில் முதலிடத்தில் இருக்கின்ற பாகிஸ்தான் அணியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் 14 பேர் கொண்ட அணி நேற்று (25) தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினுடைய தேர்வுக் குழுவின் தலைவர் லிண்டா சொன்டியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் புதுமுக வீரர் ஒருவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவில் நடைபெற்ற மஷன்சி சுப்பர் லீக் தொடரில் திறமைகளை வெளிக்காட்டிய 20 வயதுடைய இளம் வேகப்பந்துவீச்சாளரான லுதோ சிபம்லா எனும் வீரரே குழாமில் புதுமுக வீரராக அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த லீக் தொடரில் பிரகாசித்த வீரர்களான றைஸ் வென்டர் டைஸன், கிஹான் குலோய்டே, குயின்டன் டி குக், ஹென்றிச் கிலாசன் மற்றும் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் குழாமில் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் ஒருநாள் தொடரின் நேற்று (25) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஒரு நாள் அறிமுகம் பெற்ற வீரரான பியூரன் ஹென்ட்ரிக்ஸ் 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் டி20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கணுக்கால் உபாதை காரணமாக அணியிலிருந்து விலகியிருந்த சகலதுறை வீரர் வியான் முல்டர் அணிக்கு திரும்பியுள்ள அதேவேளை தென்னாபிரிக்க அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ககிஸோ ரபாடாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
பாப் டு ப்ளெசிஸ் தலைமையிலான டி20 அணியில் கிஹான் குலோய்டே (விக்கெட் காப்பாளர்), ஜூனியர் டாலா, குயின்டன் டி குக், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், ஹென்றிச் கிலாசன், டேவிட் மில்லர், கிறிஸ் மொரிஸ், வியான் முல்டர், அன்டில் பெஹலுக்வாயோ, தப்ரிஷ் ஷம்ஷி, லுதோ சிபம்லா, றைஸ் வென்டர் டைஸன்
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டுள்ள சர்ஜீல் கான்
போட்டி அட்டவணை
- 01 பெப்ரவரி – முதலாவது டி20 போட்டி – கேப்டவுண் (பகலிரவு)
- 03 பெப்ரவரி – இரண்டாவது டி20 போட்டி – ஜொஹனர்ஸ்பேர்க் (பகல்)
- 06 பெப்ரவரி – மூன்றாவது டி20 போட்டி – செஞ்சூரியன் (பகலிரவு)
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<