இலங்கை “ஏ” அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் “ஏ” அணியோடு 2 போட்டிகளைக் கொண்ட 4 நாள் டெஸ்ட் தொடரில் விளையாடி 1ஆவது போட்டியை அபாரமாக வென்றாலும் 2ஆவது போட்டியில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இலங்கை “ஏ”, பாகிஸ்தான் “ஏ” மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் விளையாடும் முக்கோண ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகியது. இன்றைய முதல் போட்டியில் இலங்கை “ஏ” மற்றும் பாகிஸ்தான் “ஏ” அணிகள் மோதின. இப்போட்டி செல்டென்ஹாம் நகரில் உள்ள கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் “ஏ” அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை “ஏ” அணி 37.5 ஓவர்களில் 199 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இலங்கை “ஏ” அணி சார்பாக எஞ்சலோ பெரேரா 35 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 29 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 27 ஓட்டங்களையும், லஹிரு கமகே 18 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் “ஏ” அணியின் தரப்பில் பந்துவீச்சில் முஹமத் அஸ்கர் 4 விக்கட்டுகளையும், முஹமத் அப்பாஸ் 3 விக்கட்டுகளையும், பிலாவல் பட்டி 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 200 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் “ஏ” அணி 33.5 ஓவர்களில் 2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 97 பந்துகள் மீதம் இருக்க 8 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. பாகிஸ்தான் “ஏ” சார்பாக சர்ஜீல் கான் 90 ஓட்டங்களையும், பக்ஹர் சமான் 74 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு உறுதுணை செய்தனர். இவர்களைத் தவிர உமர் சாதிக் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை “ஏ” அணியின் பந்துவீச்சில் கசுன் ரஜித 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்