பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக சதமடித்து அசத்திய சதீர சமரவிக்ரம

Pakistan A tour of Sri Lanka 2021

263

சதீர சமரவிக்ரமவின் அபார சதம் மற்றும் கமில் மிஷாரவின் அரைச்சதத்தின் மூலம் பாகிஸ்தான் A அணிக்கு எதிரான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியை இலங்கை A அணி சமநிலையில் முடித்தது.

பல்லேகலவில் நடைபெற்ற போட்டியின் கடைசி நாளான இன்று (07) இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இலங்கை A அணி, 8 விக்கெட்டுக்கள் கைவசமிருக்க 225 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த இளம் வீரர் கமில் மிஷார மற்றும் அணித் தலைவர் சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் பாகிஸ்தான் A அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்தனர்.

இதில் முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று இலங்கை A அணிக்கு நம்பிக்கை கொடுத்த ஆரம்ப வீரர் கமில் மிஷார மீண்டும் 98 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்டு குர்ராம் ஷஸாத்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், அணித்தலைவர் சதீர சமரவிக்ரம களத்தில் நின்று பிடித்து இலங்கை அணிக்கு இருந்த நெருக்கடியை தவிர்த்ததுடன், முதல்தரப் போட்டிகளில் தனது 7ஆவது சதத்தையும் பெற்றுக்கொண்டார்.

எனினும், இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழையினால் போட்டி பாதிக்கப்பட நான்காவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதனால், இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இலங்கை A அணிக்காக அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய சதீர சமரவிக்ரம, 223 பந்துகளில் 26 பௌண்ரிகளுடன் 151 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

முன்னதாக கடந்த 4ஆம் திகதி ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் A அணி, அப்துல்லாஹ் சபீக்கின் சதத்தின் உதவியால் முதல் இன்னிங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 394 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை A அணியின் பந்துவீச்சு சார்பில் சாமிக்க குணசேகர 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை A அணி, 67 சுருண்டது. எனவே, பலோ ஒன்னை (Follow-On) தவிர்க்க 327 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை இலங்கை அணி நேற்று ஆரம்பித்தது.

ஏவ்வாறாயினும், முதல் டெஸ்ட் போட்டியைப் போல இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அடிக்கடி பெய்த மழை இலங்கை அணிக்கு கைகொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நவம்பர் 10ஆம் திகதி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் A அணி – 394/10 (106) – அப்துல்லாஹ் சபீக் 117, அங்கா சல்மான் 103, கம்ரான் குலாம் 45, நஷீம் ஷா 31, சாமிக்க குணசேகர 6/83, ஹிமேஷ் ராமநாயக்க 1/56

இலங்கை A அணி – 67/10 (22) – சுமிந்த லக்ஷான் 29, நிபுன் தனன்ஜய 17, நஷீம் ஷா 4/28, குர்ராம் ஷஸாத் 3/10, அர்ஷாத் இக்பால் 2/14

இலங்கை A அணி – 102/2 (28.3) – கமில் மிஷார 53*, சதீர சமரவிக்ரம 19*, நிஷான் மதுஷங்க 12, அங்கா சல்மான் 1/17

இலங்கை A அணி – 317/6 (86.4) – சதீர சமரவிக்ரம 151*, கமில் மிஷார 98, சுமிந்த லக்ஷான் 25, குர்ராம் ஷஸாத் 2/67

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<