இலங்கை A மற்றும் பாகிஸ்தான் A அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (05) நிறைவுக்கு வந்தது.
இதில் பாகிஸ்தான் A கிரிக்கெட் அணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய அப்துல்லாஹ் சபீக் மற்றும் அங்கா சல்மான் ஆகிய இருவரும் சதமடித்து அசத்த, பந்துவீச்சில் நஷீம் ஷா 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.
சுற்றுலா பாகிஸ்தான் A அணிக்கும் இலங்கை A அணிக்கும் இடையிலான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி நேற்று (04) கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகியது.
பாகிஸ்தான் A அணிக்கு எதிராக சாமிக்க அபார பந்துவீச்சு
இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் A அணி, சீரற்ற காலநிலையால் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும் போது 4 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர் அப்துல்லாஹ் சபீக் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களைப் பெற்று களத்தில் நின்றார்.
இதுஇவ்வாறிருக்க, போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் (05) பாகிஸ்தான் A கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.
ஐந்தாவது விக்கெட்டுக்காக அப்துல்லாஹ் சபீக் மற்றும் அங்கா சல்மான் ஜோடி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ஓட்டங்களை சேர்த்தனர். இதில் அப்துல்லாஹ் சபீக் சதம் கடந்து 117 ஓட்டங்களை எடுத்து சுமிந்த லக்ஷானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மிஷாரவின் சிறப்பாட்டத்தால் தோல்வியை தவிர்த்த இலங்கை A அணி
தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், அங்கா சல்மான் பெற்றக்கொண்ட சதத்தின் உதவியோடு பாகிஸ்தான் A அணி 106 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 394 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை A கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் சாமிக்க குணசேகர 83 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும், ஹிமேஷ் ராமநாயக்க, மொஹமட் சிராஸ் மற்றும் சுமிந்த லக்ஷான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை A கிரிக்கெட் அணி, மீண்டும் நஷீம் ஷா மற்றம் குர்ராம் ஷஸாத் ஆகியோரது வேகப் பந்துவீச்சில் தடுமாறி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.
இதில் சுமிந்த லக்ஷான் (29) மற்றும் நிஷான் மதுஷங்க (17) ஆகிய இருவரையும் தவிர ஏழு வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர்.
எனவே, போதிய வெளிச்சமிண்மை காரணமாக போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும் போது இலங்கை A கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 64 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.
துவிந்து திலகரட்ன, சாமிக்க குணசேகர ஆகிய இருவரும் ஓட்டமின்றி களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் A அணியின் பந்துவீச்சில் நஷீம் ஷா 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், குர்ராம் ஷஸாத் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையம் கைப்பற்றினர்.
போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நாளை (06) நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
பாகிஸ்தான் A அணி – 394/10 (106) – அப்துல்லாஹ் சபீக் 117, அங்கா சல்மான் 103, கம்ரான் குலாம் 45, நஷீம் ஷா 31, சாமிக்க குணசேகர 6/83, ஹிமேஷ் ராமநாயக்க 1/56
இலங்கை A அணி – 64/9 (21) – சுமிந்த லக்ஷான் 29, நிபுன் தனன்ஜய 17, நஷீம் ஷா 4/25, குர்ராம் ஷஸாத் 3/10
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<