பாகிஸ்தான் A அணிக்கு எதிராக சாமிக்க அபார பந்துவீச்சு

Pakistan A tour of Sri Lanka 2021

257

இலங்கை A மற்றும் பாகிஸ்தான் A அணிகளுக்கு இடையிலான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி இன்று (04) கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது.

சீரற்ற காலநிலை காரணமாக போட்டியின் முதல் நாள் ஆட்டம் 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதுடன், தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் A அணி 4 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் A அணியின் தலைவர் சவுத் சகீல், முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

மழைக்கு மத்தியில் பாகிஸ்தான் A அணி நிதான ஆட்டம்

அதன்படி பாகிஸ்தான் A அணியின் சார்பில் அப்துல்லாஹ் சபீக், சவுத் சகீல் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். அணித்தலைவர் சவுத் சகீல் 9 ஓட்டங்களுடன் சாமிக்க குணசேகரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஒமைர் யூஸுப்பும் 14 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஹிமேஷ் ராமநாயக்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் 3ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அப்பதுல்லாஹ் சபீக் – கம்ரான் குலாம் ஆகிய இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்களைக் குவித்தனர். இதில் கம்ரான் குலாம் 45 ஓட்டங்களுடனும், தொடர்ந்து வந்த உஸ்மான் சலாஹுதீன் 9 ஓட்டங்களுடனும் சாமிக்க குணசேகரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து போட்டி மழையினால் தடைப்பட போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

மிஷாரவின் சிறப்பாட்டத்தால் தோல்வியை தவிர்த்த இலங்கை A அணி

எனவே, தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் A அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்று காணப்படுகின்றது.

பாகிஸ்தான் சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர் அப்துல்லாஹ் சபீக் 156 பந்துகளுக்கு முகங்கொடுத்து ஒரு சிக்ஸர், 14 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை A அணியின் பந்துவீச்சில் சாமிக்க குணசேகர 10 ஓவர்கள் பந்துவீசி 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஹிமேஷ் ராமநாயக்க ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை (05) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் A அணி – 180/4 (50.1) – அப்துல்லாஹ் சபீக் 89*, கம்ரான் குலாம் 45, சாமிக்க குணசேகர 3/42, ஹிமேஷ் ராமநாயக்க 1/42

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<