இலங்கை A அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர்களின் உதவியால் பாகிஸ்தான் A கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் A அணி, நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி வருகின்றது. இதில் இவ்விரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற 2 போட்டிகளைக் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.
இந்த நிலையில், இலங்கை A – பாகிஸ்தான் A அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (11) தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் A அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை A அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான லசித் குரூஸ்புள்ளே, குர்ராம் ஷஸாத்தின் பந்துவீச்சிலும், லஹிரு உதார நசீம் ஷாவின் பந்துவீச்சிலும் அடுத்தடுத்து டக்-அவுட் ஆகி வெளியேறினர்.
தொடர்ந்து வந்த சதீர சமரவிக்ரம (1), அஷேன் பண்டார (6) ஆகிய இருவரும் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.
- இலங்கை A அணியின் தலைவராகும் கமிந்து மெண்டிஸ்!
- பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக சதமடித்து அசத்திய சதீர சமரவிக்ரம
- இலங்கை A அணிக்காக அரைச்சதம் அடித்த கமில் மிஷார
எனினும், அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் 34 ஓட்டங்களையும், சஹன் ஆரச்சிகே 23 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்தாலும், பின்வரிசை வீரர்கள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு தடுமாறி விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்
இதனால் இலங்கை A அணி, 32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் A அணியின் பந்துவீச்சில் அப்பாஸ் அப்ரிடி 4 விக்கெட்டுக்களையும், குர்ராம் ஷஸாத் 3 விக்கெட்டுக்களையும், நசீம் ஷா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பின்னர், 103 என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் A அணி, தமது முதல் விக்கெட்டினை 38 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அப்துல்லாஹ் சபீக் (15) புலின தரங்கவின் பந்துவீச்சில் சதீர சமரவிக்ரமவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து வந்த அணித்தலைவர் சவுத் சகீல் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, நிதானமாக ஆடி ஓட்டங்களைக் குவித்த ஆரம்ப வீரர் ஒமைர் யூசுப் 38 ஓட்டங்களுடனும், காசிம் அக்ரம் ஓட்டமின்றியும் அஷைன் டேனியலின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினர்.
எனினும், 5ஆவது விக்கெட்டுக்காக அங்கா சல்மானுடன் ஜோடி சேர்ந்த மொஹமட் தாஹா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, பாகிஸ்தான் A அணி, 21.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இதன்படி, 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் A அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1க்கு 0 என முன்னிலையில் உள்ளது.
இலங்கை A அணியின் பந்துவீச்சில் அஷைன் டேனியல் 2 விக்கெட்டுக்களையும், லஹிரு சமரகோன் மற்றும் புலின தரங்க ஆகியோரர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
இவ்விரு அணிகளுக்குமிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (13) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது
போட்டியின் சுருக்கம்
இலங்கை A அணி – 102/10 (32.2) – கமிந்து மெண்டிஸ் 32, சஹன் ஆரச்சிகே 23, அப்பாஸ் அப்ரிடி 4/30, குர்ராம் ஷஸாத் 3/19, நசீம் ஷா 2/26
பாகிஸ்தான் A அணி – 103/4 (21.2) – ஒமைர் யூசுப் 38, மொஹமட் தாஹா 19*, அப்துல்லாஹ் சபீக் 15, அஷைன் டேனியல் 2/30
முடிவு – பாகிஸ்தான் A கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<