பாகிஸ்தான் A அணி மற்றும் பங்களாதேஷ் U19 அணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் A அணி, இரண்டு நான்கு நாட்கள் கொண்ட போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், இந்தப்போட்டிகள் தம்புள்ளையில் நடைபெறவுள்ளன.
தம்மிக்க பிரசாத்திற்கு நன்றி தெரிவித்த சஹீட் அப்ரிடி
அதேநேரம், பங்களாதேஷ் U19 மற்றும் இலங்கை U19 அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் மோதவுள்ளன. இந்தப்போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
கடந்த ஆண்டு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதற்கு பின்னர், இலங்கை A மற்றும் இலங்கை U19 அணிகள் விளையாடும் முதல் தொடராக இந்த தொடர் அமையவுள்ளது. இலங்கை A அணியானது, பங்களாதேஷ் A அணிக்கு எதிராக இரண்டு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் 2019ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஹம்பாந்தோட்டையில் விளையாடியிருந்தது. இலங்கை A அணியின் இறுதி தொடராக இந்த தொடர் அமைந்திருந்தது.
அத்துடன், இலங்கை U19 அணியானது இறுதியாக, கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில், பாகிஸ்தான் U19 அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் விளையாடியிருந்தது.
நடைபெறவுள்ள இந்த தொடர், இலங்கை U19 அணிக்கு மிகவும் முக்கியமான தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இளையோர் ஆசிய கிண்ணம் மற்றும் ஜனவரி மாதத்தில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள இளையோர் உலகக்கிண்ண தொடர்களில் இலங்கை U19 அணி விளையாடவுள்ளது. இதற்கான சிறந்த தயார்படுத்தலாக இந்த தொடர் அமையும் என எதிர்பார்பார்க்கப்படுகிறது.
இலங்கை U19 அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக, முன்னாள் இலங்கை வீரர் அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதுடன், முகாமையாளராக மஹிந்த ஹலங்கொட செயற்படவுள்ளார். இலங்கை ஏ அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி இதுவரை வெற்றிடமாக உள்ள நிலையில், ருவான் பீரிஸ், தர்ஷன கமகே மற்றும் சஜீவ வீரகோன் ஆகியோர் முறையே துடுப்பாட்ட, வேகப்பந்துவீச்சு மற்றும் சுழல் பந்துவீச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<