பாகிஸ்தான் இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்று சமநிலையில் முடிவுற்றது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆரம்பமாக முன் பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணியோடு 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் 1ஆவது ஒருநாள் போட்டி நேற்று டப்லின் மைதானத்தில் இடம் பெற்றது.
போட்டி மழை காரணமாக தாமதித்து ஆரம்பமாகியது. இதனால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 47 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 337 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சர்ஜீல் கான் 86 பந்துகளுக்கு முகம் கொடுத்து 16 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கலாக 152 ஓட்டங்களையும், சுஹைப் மலிக் 37 பந்துகளுக்கு முகம் கொடுத்து 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 57 ஓட்டங்களையும், முஹமத் நவாஸ் 50 பந்துகளுக்கு முகம் கொடுத்து 7 பவுண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களையும், முஹமத் ஹபீஸ் 59 பந்துகளுக்கு முகம் கொடுத்து 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 37 ஓட்டங்களையும் பெற்றனர். அயலர்லாந்து அணியின் சார்பில் பந்துவீச்சில் பர்ரி மகார்த்தி 62 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
பின் 338 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணி 23.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 82 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்த அணி சார்பாக கெரி வில்சன் 21 ஓட்டங்களையும், மேக்பெர்ன் ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் கரீபியன் பிரிமியர் லீக்கில் கலக்கிய இமாத் வசீம் 14 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளையும் மீண்டும் அணிக்குள் திரும்பிய உமர் குல் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்கள். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 255 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியின் சுருக்கம்
பாகிஸ்தான் – 337/6 (47) – சர்ஜீல் கான் 152, சுஹைப் மலிக் 57*, முஹமத் நவாஸ் 53, முஹமத் ஹபீஸ் 37 , பர்ரி மகார்த்தி 62/4
அயர்லாந்து – 82/10 (23.4) – கெரி வில்சன் 21, மேக்பெர்ன் 14* , இமாத் வசீம் 14/5, உமர் குல் 23/3
பாகிஸ்தான் அணிக்கு 255 ஓட்டங்களால் வெற்றி
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்