இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இனிங்ஸில் 339 ஒட்டங்களைக் குவித்தது. மிஸ்பா உல் ஹக் சதம் அடித்து அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்தார். அவருக்குத் துணையாக ஹபீஸ் 40 ஓட்டங்களையும், ஆசாத் ஷபிக் 73 ஓட்டங்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் வோக்ஸ் 6 விக்கட்டுகளைச் சாய்த்தார்.
பின்னர் முதல் இனிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 79.1 ஓவர்கள் முடிவில் 272 ஓட்டங்கள் எடுத்து சகல விக்கட்டுகளையும் இழந்தது. வோக்ஸ் 35 ஓட்டங்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிகபட்சமாக குக் 81 ஓட்டங்களைக் குவித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா 6 விக்கட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 67 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இனிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி 215 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. அசாத் சபீத் அதிகபட்சமாக 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்பராஸ் அகமது 45 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 5 விக்கட்டுகளைச் சாய்த்தார்.
இதனையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 283 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4ஆவது நாள் ஆட்டம் என்பதால் இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. அதேபோல் விக்கட்டுகள் விரைவில் விழுத்தப்படும்பட்சத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 207 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இனிங்ஸில் 6 விக்கட்டுகளையும், இரண்டாவது இனிங்ஸில் 4 விக்கட்டுகளையும் சாய்த்த பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை மாதம் 22ஆம் திகதி ஓல்ட் ட்ரஃபட் மைதானத்தில் நடைபெறும்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்