பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதியுமான டி20 போட்டி நேற்று அபுதாபி ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது.
இதன்படி முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக மார்லன் சாமுவேல்ஸ் ஆட்டம் இழக்காமல் 42 ஓட்டங்களையும் (59 பந்துகளில்) நிக்கலஸ் பூரன் மற்றும் கிரோன் போலார்ட் ஆகியோர் தலா 16 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் இமாத் வசீம் மீண்டும் ஒரு முறை சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின் 104 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை பெற்று 29 பந்துகள் மீதம் இருக்க 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று டி20 தொடரை 3 – 0 என்ற ரீதியில் கைப்பற்றியது. பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சுஹைப் மலிக் ஆட்டம் இழக்காமல் 43 ஓட்டங்களையும், பாபர் அசாம் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களையும், காலித் லத்தீப் 21 ஓட்டங்களையும் பெற்றனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டி மற்றும் போட்டித் தொடரின் நாயகனாக இமாத் வசீம் தெரிவு செய்யப்பட்டார்.
போட்டியின் சுருக்கம
மேற்கிந்திய தீவுகள் – 103/5 (20) மார்லன் சாமுவேல்ஸ் 42* , நிக்கலஸ் பூரன் 16, கிரோன் போலார்ட் 16*, இமாத் வசீம் 21/3
பாகிஸ்தான் – 108/2 (15.1) சுஹைப் மலிக் 43*, பாபர் அசாம் 27*, காலித் லத்தீப் 21, கெஸ்ரிக் வில்லியம்ஸ் 15/2
பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி