தியகமவில் இடம்பெறும் 21ஆவது இராணுவ பரா மெய்வல்லுனர் போட்டிகள்

229

டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் பூரண அனுசரணையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 21ஆவது இராணுவ பரா விளையாட்டு விழாவில் பிரதானமானதும் இறுதியுமான பரா மெய்வல்லுனர் போட்டிகள் நாளை (19) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனரில் இலங்கை இராணுவத்துக்கு முதலிடம்

இலங்கையின் பாதுகாப்பை நிலைபெறச் செய்வதில்..

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இம்முறை போட்டிகளில் 72 பரா மெய்வல்லுனர் நிகழ்ச்சிகளுக்காக இலங்கை இராணுவத்தின் 11 படைப் பிரிவுகளைச் சேர்ந்த 700 இற்கும் மேற்பட்ட பரா இராணுவ வீரர்கள் பங்குபற்றி தத்தமது மாற்றுத் திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.

இம்முறை பரா விளையாட்டு விழா போட்டிகளில் சக்கர நாற்காலி வலைப்பந்தாட்டம், பெட்மிண்டன், சைக்கிளோட்டம், சக்கர நாற்காலி மரதன், வில்லெய்தல், பளுதூக்குதல், கரப்பந்தாட்டம், கடற்கரை கரப்பந்தாட்டம், மேசைப் பந்து, கிரிக்கெட், நீச்சல், சக்கர நாற்காலி டென்னிஸ், குறிபார்த்து துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட 12 வகையான போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், பரா மெய்வல்லுனர் போட்டிகள் குறித்து ஊடகங்ளை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பு பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் கடந்த வியாழக்கிழமை (13) இடம்பெற்றது.

இலங்கை பரா மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடக சந்திப்பில் பரா மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ரஜீவ விக்ரமசிங்க, இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து, பரா சங்கத்தின் செயலாளர் கேர்ணல் ராஜா குணரத்ன மற்றும் டயலொக் ஆசியாட்ட பி.எல்.சி நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணயக்கார ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதில் இலங்கை இராணுவப் பரா மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ கருத்து வெளியடுகையில், ”இந்த வருடமும் நடைபெறவுள்ள இராணுவ பரா விளையாட்டு விழாவில் அதிகளவான தன்னார்வத் தொண்டர்கள் தமது பங்களிப்பினை வழங்குவதற்கு முன்வந்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறோம். அத்துடன், யுத்தத்தினால் தமது அவயவங்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக உள்ள இராணுவ வீரர்களின் திறமைகளை இனங்கண்டு, அவர்களையும் சர்வதேச மட்டத்தில் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றச் செய்வதே எமது நோக்கமாகும். அதுமாத்திரமின்றி, அண்மைக்காலமாக நடைபெறுகின்ற சர்வதேச போட்டிகளில் அவர்கள் போட்டியிட்டு பல பதக்கங்களையும் வென்று நாட்டிற்கு பெருமையையும் ஈட்டிக் கொடுத்துள்ளனர்” என கூறினார்.

இது இவ்வாறிருக்க, இம்முறை பரா விளையாட்டு விழாவில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்கள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் ஆரம்பமாகவுள்ள ஆசிய பரா விளையாட்டு விழாவுக்கு நேரடியாகத் தகுதியினைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.  

அத்துடன், இம்முறை ஆசிய பரா விளையாட்டு விழாவில் சுமார் 40 வீரர்களை இலங்கை சார்பாக பங்குபற்றச் செய்யவும் இராணுவ பரா மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இலங்கை இராணுவ பரா மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை இராணுவத்தின பரா மெய்வல்லுனர் போட்டிகளுக்கு டயலொக் ஆசியாட்ட நிறுவனம் தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் அனுசரணை வழங்குகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> காணொளிகளைப் பார்வையிட <<