ஆசியாவில் சம்பியனாகும் கனவுடனே களமிறங்கினோம் – திலகா ஜினதாச

286

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பு இலங்கை அணிக்கு கிடைத்த போதிலும், அந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி எதிரணிக்கு வெற்றியை தாரைவார்த்து விட்டு ஏமாற்றத்துடனே இலங்கை அணி நாடு திரும்பியது.

எனினும், ஒன்பது வருடகால கசப்பான அனுபவத்தை மறந்துவிட்டு புதிய எதிர்பார்ப்புடன், புதிய அணியாக திலகா ஜினதாசவின் பயிற்றுவிப்பின் கீழ் கட்டியெழுப்பப்பட்ட இலங்கை அணி, கடந்த வாரம் சிங்கப்பூரில் நிறைவுக்கு வந்த ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை வென்று ஆசிய வலைப்பந்தாட்ட மகாராணிகளாக நாடு திரும்பியிருந்தனர்.

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் கிண்ணம் இலங்கை அணிக்கு

சிங்கப்பூரின் OCBC அரங்கில் இன்று (9) நடைபெற்று …

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் ஒன்பது வருடங்களின் பின்னர் சம்பியனான இலங்கை அணி, ஐந்தாவது தடவையாக ஆசிய சம்பியனாக முடிசூடியது. முன்னதாக 1989, 1997, 2001 மற்றும் 2009 ஆகிய வருடங்களில் இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றிருந்தன. அத்துடன், ஆசிய வலைப்பந்தாட்ட வரலாற்றில் அதிக தடவைகள் சம்பியனான ஆசிய நாடு என்ற பெருமையையும் இலங்கை தக்கவைத்துக் கொண்டது.

இறுதியாக 2009 இல் சம்பியனாகிய போது இலங்கை அணியின் பயிற்சியாளராகக் கடமையாற்றிய திலகா ஜினதாசவின் பயிற்றுவிப்பின் கீழ் இம்முறையும் இலங்கை அணி சம்பியனாகியது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அத்துடன், இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் வரத்தைப் பெற்றுக்கொண்ட இரண்டு வீராங்கனைகளில் திலகா ஜினதாசவும் ஒருவர். 1988 சியோல் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீற்றர் தடைதாண்டலில் திலகா ஜினதாசவும், பெண்களுக்கான நீச்சலில் தீபிகா சண்முகமும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சரிவுகள், இன்னல்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் இளம் வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை வலைப்பந்தாட்ட அணியை வெறுமனே ஏழு மாதங்களில் ஓர் அணியாக மீண்டும் கட்டியெழுப்பி அவர்களை ஆசிய மகராணிகளாக அரியணையில் அமர வைத்த அனைத்து கௌரவமும் பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாசவையே சாரும். எனவே திலகா ஜினதாசவினால் ஆசிய கிண்ண வெற்றியின் பிறகு எமது இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட நேர்காணலை இங்கு பார்ப்போம்.

ஒன்பது வருடங்களுக்குப் பிறகு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை உங்களது வழிகாட்டலில் மீண்டும் வெற்றி கொள்ள முடிந்தது. இந்த வெற்றி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

உண்மையில் நாம் சுமார் ஒன்பது வருடங்களாக காத்திருந்தோம். இறுதியாக இந்த பட்டத்தை 2009 ஆம் ஆண்டு எனது பயிற்றுவிப்பின் கீழ் கைப்பற்றினோம். அதன் பிறகு இந்த பட்டத்தை தொடர்ச்சியாக 3 தடவைகள் தக்கவைத்துக் கொள்ள நாம் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. ஆனால் இலங்கைக்கு மீண்டும் வந்து வெறுமனே ஏழு மாதங்களில் அணியை சிறந்த முறையில் பயிற்றுவித்து ஆசிய சம்பியனாக்க முடிந்தமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தப் போட்டித் தொடரை வெல்ல நீங்கள் எவ்வாறான திட்டங்களை முன்னெடுத்தீர்கள்?

எனது வீராங்கனைகள் இம்முறை ஆசிய வலைப்பந்தாட்ட கிண்ணத்தை வென்று கொடுப்பார்கள் என நான் மிகவும் நம்பியிருந்தேன். பயிற்சிகளின் போது அவர்களுக்கிடையே காணப்பட்ட ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை என்பவைதான் இதற்கு முக்கிய காரணமாக இருந்தன. அதுமாத்திரமின்றி, நான் இலங்கைக்கு மீண்டும் வரும்போது இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் தேசிய மட்ட வீராங்கனைகள் பலர் இருப்பதாகவும், அவர்களை சமாளிப்பது இலகுவான விடயமல்ல என பலர் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அணியில் இடம்பெற்றிருந்த அனைத்து வீராங்கனைகளுக்கும் முதலில் ஒழுக்க விழுமியங்களை சொல்லிக் கொடுத்தால் நிச்சயம் எம்மால் சிறந்த அணியொன்றை உருவாக்க முடியும் என நம்பினேன். அதற்கான பிரதிபலனைத்தான் தற்போது நாம் கொண்டாடி வருகின்றோம்.

தர்ஜினியின் சிறப்பட்டத்தால் சிங்கப்பூரையும் அச்சுறுத்திய இலங்கை வலைப்பந்து அணி

தர்ஜினி சிவலிங்கத்தின் அபார ஆட்டத்துடன் இலங்கை …

அத்துடன், எமது வீராங்கனைகள் ஒவ்வொரு போட்டியிலும் தமது உடற்தகுதியினை நிரூபித்து காட்டினர். அவ்வாறு இருந்தால் தான் எமக்கு அவர்களது மனோநிலையை ஒருமுகப்படுத்தி சிறந்த முறையில் போட்டிகளில் விளையாடச் செய்வதற்கான சூழலை உருவாக்க முடியும். எனவே இம்முறை ஆசிய வலைப்பந்தாட்டத்தில் வீராங்கனைகளின் மனோநிலையை வலுப்படுத்த உதவியாக இருந்த நாலக்க ஹேமாமத்துமவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிங்கப்பூர் அணியை சொந்த மண்ணில் வீழ்த்த கிடைத்தமை தொடர்பில் என்ன நினைக்கிறீர்கள்?

போட்டி ஆரம்பமாவதற்கு முன் என்னிடமும் பதற்றம் இருந்தது. ஏனெனில் ஆசிய வலைப்பந்தாட்டத்தில் சிங்கப்பூர் அணிதான் எந்த சந்தர்ப்பத்திலும் வெற்றிக்காக போராடுகின்ற அணியாகும். எனவே அவர்களது விளையாட்டு உக்திகளை எம்மால் ஊகித்துக் கொள்ள முடியாமல் இருந்தது. அவர்களும் இப்போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடித்தான் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர். ஆனாலும், இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் ரசிகர்களைப் போல இலங்கை ரசிகர்களும் மைதானத்துக்கு வந்து எமது வீராங்கனைகளுக்கு உற்சாகமளித்தமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதுமாத்திரமின்றி, இவ்வருடத்தில் நடைபெற்ற 4 போட்டிகளில் சிங்கப்பூர் அணியை நாம் வீழ்த்தியதும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

ஆசியாவை வெல்ல நீங்கள் பல தியாகங்களைச் செய்தீர்கள். அது பற்றிச் சொல்லுங்கள்?

நான் எப்போதும் ஒரு வீராங்கனையாக, பயிற்றுவிப்பாளராக பல தியாகங்களை செய்துள்ளேன். நான் எதையும் திட்டங்களை வகுத்துத்தான் செய்வேன். நான் இலங்கையில் இல்லாத காலத்தில் எமது வீராங்கனைகளின் திறமைகளை பார்த்து வியந்து போனேன். ஆனால் திறமைகள் இருந்தும் அவர்களை உரிய முறையில் வழிநடத்த எவரும் இருக்கவில்லை. அதேபோல பெரும்பாலான வீராங்கனைகள் குறைந்தபட்சம் கால் மணிநேரமாவது பயிற்சிகளில் ஈடுபடுவதில்லை எனவும் கேள்வியுற்றேன். ஆனால் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் இலங்கை அணியை நான் பொறுப்பேற்றேன். எனக்கு கிடைத்த அணியில் திறமையான வீராங்கனைகள் இருந்தனர். அவர்களிடம் காணப்பட்ட குறைபாடுகளை ஏழு மாதங்களுக்குள் நிவர்த்தி செய்து ஓர் அணியாக ஆசிய வலைப்பந்தாட்டத்துக்கு அழைத்துச் சென்றேன் இறுதியில் சம்பியனாக நாடு திரும்பினேன். ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் இரவுபகலாக, வெயில்மழை பாராமல் நிறைய அணிகளை பயிற்றுவித்தால் தாங்கள் தான் சிறந்த பயிற்றுவிப்பாளர்கள் என பெரும்பாலனவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அது தவறு. பயிற்றுவிப்பாளராக தற்போதைய புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கி எமது அறிவையும் புதுப்பித்துக் கொண்டு வீரர்களுக்கு என்ன வேண்டும் என்பதைத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதைத்தான் நான் செய்தேன்.

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக உங்களை நியமித்த போது பலர் அதற்கு எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தனர். ஆனால் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நீங்கள் தான் இந்தப் பதவிக்கு பொறுத்தமானவர் என உறுதியான நிலைப்பாடுடன் இருந்தார். அதுபற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

உண்மையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்தான் என்னை பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் கொண்டு வந்தார். தொடர் தோல்விகள் மற்றும் பின்னடைவுகளை சந்தித்து வருகின்ற இலங்கையின் வலைப்பந்தாட்டத்தை மீண்டும் வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவுங்கள் என்ற கோரிக்கையை மாத்திரமே அவர் என்னிடம் முன்வைத்திருந்தார்.

அதேபோல தற்போதுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஏனெனில் இந்த தொடருக்கு முன் மேலதிக பயிற்சிகளுக்காக மலாவி நாட்டுக்குச் சென்று விளையாட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் இருந்தோம். ஆனால் எமது சங்கத்திடம் அந்தளவு பணம் இருக்கவில்லை. ஆனால் நாம் விடுத்த கோரிக்கையை எந்தவொரு மறுப்பும் இன்றி ஏற்றுக்கொண்ட அவர், எமக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். எனவே அங்கு சென்று விளையாடிய அனுபவம் இந்த தொடரை வெற்றிக் கொள்வதற்கு மிகப் பெரிய உந்துகோலாகவும் இருந்தது.

மலாவி சுற்றுப்பயணம் குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அது தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் 6 ஆவது இடத்தில் மலாவி உள்ளது. அங்கு சென்று 10 – 15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தான் நாம் தோல்வியுற்றோம். அந்த சுற்றுப்பயணத்தில் கிடைத்த அனுபவம்தான் ஆசிய சம்பியனாகுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அதேபோன்று அங்கு எமக்கு உதவியாக இருந்த மலாவியில் வசித்து வருகின்ற இரேஷா மற்றும் தரங்க ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

காணொளிகளைப் பார்வையிட…

அதேபோல, இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவி ட்ரிக்சி நாணயக்காரவுக்கு விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்தான் என்னை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் என்னை மீண்டும் இப்பதவிக்கு நியமித்தது தொடர்பில் பலர் அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதுமாத்திரமின்றி எனக்கு பின்னால், எப்போதும் உறுதுணையாக இருந்த அணியின் முகாமையாளர் தனூஜாவுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட சவாலுக்கு முகங்கொடுக்க தயாரக இருக்கின்றீர்களா?

உண்மையில் மிகப் பெரிய சவால், ஆனால் தற்போது முதல் அதற்கான பயிற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். அதேபோல உலகக் கிண்ணத்திற்கான தெரிவுப் போட்டிகளை விரைவில் நடாத்த வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால் பயிற்சிகளை மேற்கொள்ள எம்மிடம் உரிய மைதானங்கள் இல்லை. இதுவரை நாம் விமானப்படையின் உள்ளக அரங்கில் தான் பயிற்சிகளை மேற்கொண்டோம். எனவே உலகக் கிண்ணத்திற்கு செல்வதற்கு முன் எமக்கான ஒரு வலைப்பந்தாட்ட மைதானத்தை பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை விளையாட்டுத்துறை அமைச்சினால் பெற்றுத்தர வேண்டும். இந்த விடயங்களை சரிவரச் செய்தால் நிச்சயம் உலக வலைப்பந்தாட்டத் தொடரிலும் எமக்கு சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இது இவ்வாறிருக்க, இலங்கை அணியின் பயிற்சியாளராகக் கடமையாற்றி இரண்டு தடவைகள் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த திலகா ஜினதாசவின் பதவிக்காலம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்தின் லிவர்பூலில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக அவர் தொடர்ந்து செயற்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு அவருக்கு பதவி நீடிப்பு வழங்காவிட்டால், ஆசியாவில் பெற்ற கௌரவத்தை உலக அரங்கில் இலங்கை அணி கோட்டைவிடுகின்ற நிலை ஏற்பட்டுவிடும். எனவே அவரது பதவிக்காலம் தொடர்பில் வலைப்பந்தாட்ட சம்மேளனமும், விளையாட்டுத்துறை அமைச்சரும் உடனடி தீர்வொன்றை எடுக்க வேண்டும்.  

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…