பாகிஸ்தானுடன் ஆக்ரோஷம் வெற்றிக்கு வழிவகுத்தது – ஹோல்டர்

209
Image Courtesy - Getty

நவீன கால கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக விளையாடி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் தான் எதிரணிக்கு நெருக்கடியைக் கொடுக்க முடியும் என தெரிவித்த மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர், அந்த உத்தியை பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் பின்பற்றியதால் தான் வெற்றிபெற முடிந்ததாக குறிப்பிட்டார்.

மேற்கிந்திய தீவுகளின் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்

நேற்று ஆரம்பமான 12 ஆவது கிரிக்கெட் உலகக் கிண்ணத்……

உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இதன் இரண்டாவது போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று (31) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களின் மிரட்டல் பந்துவீச்சால் அந்த அணி பாகிஸ்தானை துவம்சம் செய்து 7 விக்கெட்டுகளால் வெற்றியை சுவீகரித்தது.

நொட்டிங்டமில் உள்ள ரென்ட் பிரிஜ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 21.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் பாகிஸ்தான் அணியின் இரண்டாவது மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகவும் இது பதிவாகியது.

பின்னர், இலகுவான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, கிறிஸ் கெய்லின் அபார அரைச் சதத்தின் உதவியுடன் வெற்றியிலக்கை அடைந்தது. எனவே, டி-20 போட்டியை விட மிகவும் மோசமாக விளையாடிய பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றியொன்றைப் பதிவுசெய்தது.  

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியுடனான வெற்றிக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் அளித்த பேட்டியில், எங்கள் வீரர்களுக்கு அறிவுறுத்தியபடி விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஷானே தோமஸ், அன்ட்ரூ ரசல், ஷெல்டன் கொட்ரெல் ஆகியோர் துல்லியமாக பந்து வீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர். அதிக ஓட்டங்கள் குவிக்கப்படும் இந்த கால கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானதாகும்.

எங்களுடன் விளையாடுகின்ற எந்தவொரு எதிரணியுடனும் சற்று ஆக்ரோஷமாக விளையாட வேண்டும். நவீன கால கிரிக்கெட்டில் அவ்வாறு செய்தால் தான் விக்கெட்டுக்களைக் கைப்பற்றி நெருக்கடி கொடுக்க முடியும். அதேபோல, ஆரம்பத்திலே விக்கெட்டுகளை எடுக்க தவறினால் நிச்சயம் எதிரணியைக் கட்டுப்படுத்த போராட வேண்டி ஏற்படும். எனவே, இந்தப் போட்டியில் நாங்கள் ஆரம்பம் முதல் ஆக்ரோஷமாக விளையாடி ஒருசில ஓட்டங்களை விட்டுக்கொடுத்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி நெருக்கடி கொடுத்தோம்” என அவர் தெரிவித்தார்.

இரண்டு மில்லியன் இரசிகர்களின் எதிர்பார்ப்புடன் முதல் போட்டியில் இலங்கை

உலக கிரிக்கெட் இரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட்……

அத்துடன், கிமார் ரோச்சுக்குப் பதிலாக மேற்கிந்திய தீவுகள் அணியில் விளையாடிய இளம் வேகப் பந்துவீச்சாளரான ஷானே தோமஸ், பாகிஸ்தான் அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை 6 ஓவர்களுக்குள் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருந்தார். இதனால் அறிமுக உலகக் கிண்ணப் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். எனவே ஷானேயின் பந்துவீச்சு குறித்து ஹோல்டர் கருத்து தெரிவிக்கையில்,

”அவருடைய பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியாக மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அவர் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார், அதன்பின்னர் அவர் இங்கு வந்து நான்கு விக்கெட்டுகளை எடுத்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.  அவர் வேகமாக பந்து வீசுவதைப் பார்ப்பது நன்றாக இருந்தது. மத்திய வரிசை ஓவர்களில் பந்துவீசுகின்ற போது சற்று ஆக்ரோஷமாக பந்துவீச வேண்டும் என நாங்கள் அவரிடம் கூறியிருந்தோம். இறுதியில் அது எமக்கு வெற்றியைக் கொடுத்தது” என்றார்.

அதேபோல, கிறிஸ் கெய்ல் அருமையாக துடுப்பெடுத்தடி இருந்தார். நாங்கள் நினைத்தபடி வெற்றியுடன் போட்டியை தொடங்கி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், எதிர்வரும் 6ஆம் திகதி நொட்டிங்ஹம்மில் நடைபெறவுள்ள 10ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி, நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலிய அணியை எதிர்த்தாடவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<