டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சென்ற சில வீரர்களின் நடத்தை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கடுமையான விமர்சனத்தை நேற்று பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
அத்துடன், இலங்கை ஒலிம்பிக் அணியின் உத்தியோகப்பூர்வ ஆடை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தேசிய ஒலிம்பிக் சங்கத்திடம் அறிக்கை ஒன்றையும் கோரியுள்ளார்.
Video – இலங்கையின் நாமத்தை ஒலிம்ப்பிக்கில் மிளிரச் செய்த நம்மவர்கள்..!| 2020 Tokyo Olympics
நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது டோக்கியோ ஒலிம்பிக் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறியால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பதிலளிக்கையில்,
“இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இலங்கை வீரர்களில் மூன்று பேர் மட்டுமே நேரடி தகுதியைப் பெற்றுக்கொண்டார்கள். மற்றைய அனைவரும் வைல்ட் கார்ட் முறையில் தான் ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்கள்.
இலங்கையிலிருந்து ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டுவதற்கு வீரர்கள் உரிய மனநிலையில் இல்லை. தேசிய மட்டத்தில் போட்டிகளில் வெற்றியீட்டுவதே அவர்களின் பிரதான இலக்காக உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெற்றிக்கொள்ள ஒரு நாடு 10 முதல் 15 ஆண்டுகளாக தயாராகின்றது. இம்முறை ஜப்பானும் அவ்வாறானதொரு முறைமையை பின்பற்றியே பதக்கங்களை வெற்றிக்கொண்டு வருகிறது.
எமது நாட்டில் மாத்திரம் தான் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வேலைத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. இந்த நிலைமையை மாற்றியமைக்க நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
தேசிய விளையாட்டுப் பேரவை ஊடாக 2032ஆம் ஆண்டுவரையான பத்தாண்டு திட்டமொன்றின் ஊடாக இந்த இலக்கை அடைந்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்தார்.
குதிரை பாய மறுத்ததால் மெடில்டா கார்ல்சனுக்கு ஒலிம்பிக்கில் ஏமாற்றம்
இதனிடையே, இம்முறை ஒலிம்பிக் சென்ற இலங்கை அணி வீரர்களுக்கு நாட்டின் தேசிய கொடியுடனான ஆடை வழங்கப்படாதமை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தேசிய ஒலிம்பிக் சங்கத்திடம் அறிக்கை ஒன்றை கோரியுள்ளார்.
விளையாட்டு வீரர்கள் தமக்கு பொருத்தமான ஆடையுடன் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று தேசிய ஒலிம்பிக் சங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அத்துடன், ஒலிம்பிக்கில் பங்குபற்றும் வீரர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற மனநிலையோடே செல்ல வேண்டும். ஆனால் இலங்கையிலிருந்து இம்முறை சென்ற விளையாட்டு வீரர் ஒருவர் தனது ஸ்பைக் சப்பாத்தை இலங்கையிலேயே வைத்துவிட்டு ஜப்பான் சென்றுள்ளார்.
விளையாட்டு வீரர்கள் சப்பாத்தை எடுத்துச் செல்ல வேண்டுமென விளையாட்டு துறை அமைச்சரால் கூற முடியாது” எனவும் தெரிவித்தார்.
ஒலிம்பிக் செல்லும் இலங்கை வீரர்களுக்கு அமைச்சர் நாமல் வாழ்த்து
இதேவேளை, ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிட இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று டோக்கியோ சென்றது தொடர்பாகவும் சர்ச்சை ஒன்று ஏற்பட்டிருந்தது.
இதுதொடர்பில் பேசிய அமைச்சர், தான் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் செலவில் டோக்கியோ சென்றதாக தெரிவித்துள்ளார்.
>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<