இந்திய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் கடுமையான முயற்சிக்குப் பிறகு வெற்றிபெற கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியசம்சன், இதே உத்வேகத்துடன் உலகக் கிண்ணத்தையும் வென்று சாதனை படைப்போம் என தெரிவித்துள்ளார்.
இந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ஓட்டகளை எட்ட முடியாமல் இந்தியா 221 ஓட்டங்களுக்கு சுருண்டு 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு …………
மழை காரணமாக இந்தப் போட்டி இரண்டாவது நாளாக நடைபெற்றாலும், நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இந்திய அணியின் துடுப்பாட்டம், குறிப்பாக ஆரம்ப துடுப்பாட்ட வரிசை மொத்தமாக கைவிட்டது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அத்துடன், 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்குப் பிறகு 2ஆவது முறையாக அரையிறுதியில் இந்தியா தோல்வியைத் தழுவ, இரண்டாவது முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றது.
இந்த நிலையில் இந்தப் போட்டி குறித்து நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவிக்கையில்,
”இன்றைய நாள் எங்களுக்கானதாக அமைந்துவிட்டது. இது ஒட்டுமொத்த வீரர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக தான் நான் பார்க்கிறேன். எங்கள் வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். துடுப்பாட்டத்தில் அசுர பலம் கொண்டுள்ள இந்திய அணியை ஆரம்பத்தில் இருந்தே நெருக்கடியுடன் வைத்து கொண்டதே எங்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
ஜடேஜா மற்றும் டோனி ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி வெற்றியை நெருங்கிவிட்டனர், இருந்தாலும் ஒரு சில விடயங்கள் போட்டியை அப்படியே மாற்றிவிடும், அதுவே இன்றும் நடைபெற்றது. கடந்த தொடர்களை விட இந்த தொடர் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது, இறுதிப் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு சம்பியன் பட்டத்iதை வெல்வோம்” என்றார்.
எங்களது துடுப்பாட்டத்தின் முதல் 40 நிமிடங்கள் போட்டியை மாற்றியது – கோஹ்லி
நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான……….
வெற்றிக்கு அணி வீரர்களின் பங்களிப்பு குறித்து அவர் குறிப்பிடுகையில், ”இது ஒரு வித்தியாசமான உணர்வு. கடந்த உலகக் கிண்ணத்தில் நாம் முகங்கொடுத்த விடயங்களுடன் ஒப்பிடும் போது இந்தப் போட்டி முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தைக் கொடுத்துள்ளது. இது ஒரு கடினமான அரையிறுதிப் போட்டியாக இருந்தது. ஆனால் எமது வீரர்கள் விளையாடிய விதம் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது மிகவும் கடினமாக இருந்தது.
இந்தப் போட்டியில் எமது அணியில் உள்ள ஒவ்வொரு வீரரினதும் கதாபாத்திரம் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி நாங்கள் மேலே வந்தோம். ஒரு சில போட்டிகளில் நிலைமைகள் மிகவும் மோசமாக இருந்தது என்று நாங்கள் கண்டிருக்கிறோம். சில போட்டிகளில், நாங்கள் எங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை, ஆனால் எமது வீரர்கள் சோர்வடையவில்லை”.
இந்திய அணிக்கு எதிரான வெற்றிக்கான நுட்பங்கள் குறித்து கருத்து தெரிவித்த வில்லியம்சன்,
”240-250 ஓட்டங்களை எடுத்தால் இந்தியாவை அழுத்தத்திற்கு உட்படுத்த உதவும் என்று நாங்கள் நினைத்தோம். எமது பந்துவீச்சாளர்கள் அதை நடுத்தர மற்றும் பின்வரிசையில் இலகுவாக கையாண்டனர். அதேபோல நேற்று முழுவதும் மழை பெய்ததால், அந்த நிலைமைகளையும் மாற்றியது.
புதிய பந்தைக் கொண்டு, எங்கள் பந்துவீச்சாளர்கள் பந்தை வேகமாக வீசுவதற்கு முயன்றனர். இந்தியா போன்ற உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட அணிக்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அதேபோல ஆடுகளம் மெதுவாக இருக்கும்போது, அதில் எவ்வாறு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்” என தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 92 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியை சந்தித்திருந்தது. அந்த தருணத்தில் களமிறங்கிய சகலதுறை வீரரான ரவீந்திர ஜடேஜா, டோனியுடன் இணைந்து 116 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று இந்திய அணியின் வெற்றிக்காகப் போராடினர்.
எனினும், வில்லியம்சன் இறுதியில் ஜடேஜாவின் பிடியெடுப்பை எடுக்க இந்தியாவின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் ஜடேஜாவின் இன்னிங்ஸ் குறித்து வில்லியம்சன் கருத்து தெரிவிக்கையில்,
”ஜடேஜா விளையாடிய இன்னிங்ஸ், அவர் வேறொரு ஆடுகளத்தில் விளையாடுவது போல் இருந்தது. உண்மையில் அவர் பந்தை அழகான முறையில் நேரமெடுத்து அடித்திருந்தார். அதேபோல டோனியும், ஜடேஜாவும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாவர். எனவே அவர்கள் ஆழமாகச் சென்று விளையாடுவதற்கு முன்பு அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருந்தோம்” என்றார்.
இதேநேரம், ஜடேஜாவின் பிடியெடுப்பை எடுக்கும் போது அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்டதற்கு, யாரோ அதைப் பிடிக்க செல்கிறார்கள். ஆனால் அந்தப் பந்து எனக்கு மேலே இருக்கிறது, எனவே அது என்னுடையதாக இருக்க வேண்டும் என சிர்த்தபடி பதிலளித்தார்.
இதேநேரம், நியூசிலாந்து அணி கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தியதாகக் கூறப்பட்டபோது, அவர்கள் இதற்கு கோபப்படுவதில்லை என்று நான் நம்புகிறேன். வெளிப்படையாகச் சொன்னால், இந்தியாவில் கிரிக்கெட் மீதான ஆர்வம் நிகரற்றது, இந்த விளையாட்டை விளையாடுவதற்கு நாம் அனைவரும் அதிஷ்டசாலிகள், இந்தியா போன்ற ஒரு நாடு அதன் பின்னால் இருக்க வேண்டும்.
ஆனால், எங்களால் 1.5 பில்லியன் இந்திய ரசிகர்களை தத்தெடுக்க முடியும். அவர்கள் நிச்சயம் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தொடர்ச்சியாக இரண்டாவது தடவையகவும் தெரிவாகிய நியூசிலாந்து அணி, 2015 இறுதிப் போட்டியில் அவர்களை வீழ்த்திய அவுஸ்திரேலியாவை அல்லது வரவேற்பு நாடான இங்கிலாந்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை லோர்ட்ஸ் மைதானத்தில் சந்திக்கசுவுள்ளது.
”லோர்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டியில் விளையாட கிடைத்தமை மிகவும் சிறப்பு வாய்ந்தது, அதேபோல அனைத்து நியூசிலாந்து ஆதரவாளர்களுக்கும் நன்றி. எனவே, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என வில்லியம்சன் தெரிவித்தார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<