ஹம்பாந்தோட்டையில் நடைபெற்று வருகின்ற அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்ற இலங்கை அணியின் முன்னணி வீரர்களான ஓசத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் உபாதை மற்றும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் 3ஆவது லீக் ஆட்டத்தில் தசுன் ஷானக்க தலைமையிலான தம்புள்ள வைகிங் மற்றும் குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணிகள் இன்று (28) மோதின.
Video: LPL இல் தலைவராக சாதிப்பாரா Dasun? | Dambulla Viiking அணியின் முழுமையான பார்வை!
கண்டி டஸ்கர்ஸ் அணியின் பணிப்பின் பேரில் முதலில் துடுபெடுத்தாடக் களமிறங்கிய தம்புள்ள வைகிங் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களை எடுத்தது.
இதில் தம்புள்ள அணிக்காக நிரோஷன் டிக்வெல்லவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய ஓசத பெர்னாண்டோ, போட்டியின் 3ஆவது ஓவரின் நான்காவது பந்தில் சிக்ஸர் ஒன்றை பந்துவீச்சாளரின் தலைக்கு நேராக அடித்தார்.
எனினும், அடுத்த பந்தில் ஒரு ஓட்டத்தை எடுக்க முற்பட்ட போது கால் தடுக்கி கீழே விழுந்தார். கணுக்கால் சுளுக்கியதால் மைதானத்தில் வைத்து மிகவும் வேதனைக்குள்ளாகிய அவர், உடனடியாக மைதானத்தில் இருந்து தூக்கிச் செல்லப்பட்டார்.
பின்னர் மேற்கொண்ட பரிசோதனைகளின் முடிவில், ஓசத பெர்னாண்டோ ஒரு வாரத்திற்கு அணியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என தம்புள்ளை வைகிங் அணி தெரிவித்துள்ளது. இதனால், அவர் குறைந்தது அடுத்துவரும் 3 போட்டிகளையாவது தவறவிடுவார் என்று நம்பப்படுகின்றது.
அதே இன்னிங்ஸின் பதினொறாவது ஓவரில், சீக்குகே பிரசன்ன வீசிய Full-toss பந்தை தசுன் ஷானக்க வேகமாக அடித்தார். எனினும், குறித்த பந்தை குசல் மெண்டிஸ் அபாரமாக தடுத்தாலும், அவரது இடதுகை விரலில் இரத்தப்போக்கு ஏற்பட அவரும் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
Video: “சிறந்த அணியொன்றுடன் முதல் போட்டிக்கு தயாராக உள்ளோம்” – தசுன் ஷானக
எனினும், குசல் மென்டிஸ் கண்டி அணிக்காக துடுப்பாட வந்து சிறந்த முறையில் ஆடி 26 பந்துகளில் 34 ஓட்டங்களைக் குவித்திருந்த நிலையில், மழையின் குறுக்கீட்டினால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. எனினும், இவரது தற்போதைய நிலை குறித்த எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
எதுஎவ்வாறாயினும், லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடர் நிறைவடைந்த பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியில் குறித்த இரண்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
எனவே, குறித்த காயங்கள் காரணமாக இரண்டு வீரர்களும் தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தை தவறவிட்டால் அது இலங்கை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.
இறுதியாக, கடந்த வருடம் இலங்கை அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது ஓசத பெர்னாண்டோ அபாரமாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<