யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 208 மில்லியன் ரூபா செலவில் மிகவும் விசாலமானதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாடரங்கு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திறந்து விழாவின்போது கட்டடத்தின் கல்வெட்டினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரமாகிய பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் திரைநீக்கம் செய்து வைத்ததுடன், யாழ் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா அவர்கள் உள்ளக விளையாட்டரங்கினை திறந்து வைத்தார்.
திசர பெரேராவின் அதிரடியால் ஜப்னா ஸ்டாலியன்ஸிற்கு இலகு வெற்றி
பல்கலைக்கழக உடற்கல்வி அலகின் பணிப்பாளர் கே. கணேசநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த உள்ளக விளையாட்டரங்கானது 27 மீட்டர் நீளம் மற்றும் 44 மீட்டர் அகலத்தினையுடைய விளையாடுவதற்கான தளத்தினை கொண்டுள்ளது. அரங்கானது 1000 பேர் அமரக்கூடிய வசதியினை கொண்டுள்ளதுடன், வெகு விரைவில் இருக்கைகளினை பொருத்துவற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைய நிலையில் விளையாட்டு தளத்திற்கு மேலதிகமாக இரு தளங்கள் மாத்திரமே வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது தளமும் பூர்த்தி செய்யப்படுகையில் குறித்த அரங்கானது மேலும் பல வசதிகளை உள்ளடக்கியதாக அமையும்.
கரப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம் மற்றும் வலைப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுகளிற்கு பயன்படுத்தக்கூடிய வசதி இங்கு காணப்படுவதுடன், விரிப்பு பயன்படுத்தப்படுகையில் கபடி போன்ற விளையாட்டுகளிற்கும் இதனைப் பயன்படுத்த முடியும்.
Photos: University of Jaffna Indoor Stadium Opening Ceremony
தற்போது ஒரே தடவையில் மூன்று கரப்பந்தாட்ட மைதானங்களையும், ஏழு பூப்பந்தாட்ட மைதானங்களையும் பயன்படுத்தக்கூடியவாறாக இவ்வரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வின்போது கருத்து தெரிவித்த யாழ் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி அலகின் பணிப்பாளர் கணேசநாதன், “பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவினை நடத்துவதற்கு ஏதுவாக இந்த உள்ளக விளையாட்டு அரங்கினை அமைக்கும் முயற்சியானது 2016 இல் மேற்கொள்ளப்பட்டது அப்போதைய சூழலில் எம்மால் குறித்த நிகழ்வினை நடத்த முடியாது போனது. எனினும், அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அவர்களது முயற்சியாலும் அப்போதைய அமைச்சர் SP திசாநாயக்க மற்றும் அரசாங்கத்தின் ஆதரவுடனும் இன்று இந்த உள்ளக விளையாட்டரங்கானது வேறெந்த பல்கலைக்கழகங்களிலும் இல்லாதவாறு வசதி பொருந்தியதாக அமையப்பெற்றுள்ளது” என தெரிவித்தார்.
“இந்த உள்ளக விளையாட்டரங்கானது எங்களுடைய பல்கலைக்கழகத்தின் பெறுமதியினை அதிகரித்திருக்கின்றது. அத்துடன், மாணவர்களிற்கு அவர்களது திறனை வளர்ப்பதற்குரிய சந்தர்ப்பத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
வாழ்கை என்பது கொண்டாட்டமே, அனைவரும் கொண்டாட வேண்டும், அனைவரும் அதற்காக விளையாட வேண்டும். இந்த இடமானது அனைவரும் விளையாட்டினை கொண்டாடுவதற்குரிய களமாக இருக்கும் என்பதனை தான் நிச்சயமாக நம்புகிறேன்” என துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா அவர்கள் தெரிவித்தார்.
தமிழ் வீரர்களை அரவணைத்த Jaffna Stallions | முழுமையான பார்வை!
தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அவர்கள், ”2013 இல் 2016 ஆம் ஆண்டிற்குரிய பல்கலைக்கழக விளையாட்டு விழாவினை நடத்துவதற்குரிய பொறுப்பினை நாம் ஏற்றுக்கொண்டதன் ஊடாகவே நாம் பல்கலைக்கழக விடுதிகள், அதற்கான காணிகள், இந்த உள்ளக அரங்கு உள்ளிட்டவை அந்த விளையாட்டிற்குரிய ஏற்பாடாகவே கிடைத்தன. இந்த உத்கட்டமைப்பு வசதி மேம்பாடானது பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளினை மேம்படுத்துவதற்குரிய தளமாக அமையும்.
தோல்விகளினை ஏற்றுக்கொள்வதற்கு மனிதனை பழக்கும் முக்கிய இடம் மைதானமே. மாணவர்கள் எதிர்பார்த்தது போன்றே இந்த பயிற்சி நிலையம் மற்றும் உள்ளக அரங்கு ஆகியன கிடைத்துள்ளன. இந்த அரங்கினை மாணவர்கள் உரிமையுடனும், எதிர்காலத்தினரிற்கும் உரியது என்பதனையும் மனதில் வைத்துக்கொண்டு இந்த வளத்தினை உரிய முறையினில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
நிகழ்வின் நிறைவாக பூப்பந்தாட்ட மற்றும் மேசைப்பந்தாட்ட கண்காட்சி போட்டிகளும் இடம்பெற்றிருந்தன.