ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்த ஆண்டு ஐசிசி T20 உலகக் கிண்ணம் நாளைய தினம் (17) ஆரம்பமாகவுள்ள நிலையில், 2022ம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு T20 உலகக்கிண்ணத்தை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், கொவிட்-19 தொற்று காரணமாக தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது, 2022ம் ஆண்டு முதன்முறையாக ஆடவருக்கான T20 உலகக்கிண்ணத்தை அவுஸ்திரேலியா நடத்தவுள்ளது.
>> ஜப்னா கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக பாப் டு பிளெசிஸ்
அதன்படி, அடுத்த ஆண்டு ஒக்டோபர் 16ம் திகதி முதல், நவம்பர் 13ம் திகதி வரை ஐசிசி T20 உலகக்கிண்ணம் அவுஸ்திரேலியாவில் நடைபறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திலையில், அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெறும் முறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தொடரை நடத்தும் அவுஸ்திரேலியாவுடன், இம்முறை சுப்பர் 12 சுற்றுக்கு ஏற்கனவே தகுதிபெற்றுள்ள ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், மே.தீவுகள், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகள் அடுத்த ஆண்டு T20 உலகக்கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெற்றுள்ளன.
இந்த 8 அணிகளுடன், இம்முறை நடைபெறும் T20 உலகக்கிண்ணத்தின், முதல் சுற்றில் வெற்றிபெற்று, சுப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும் 4 அணிகள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்தின் 12 அணிகளுக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ளும்.
இதில், இந்த ஆண்டு சம்பியனாகும் அணி மற்றும் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிகளுடன், அடுத்த மாதம் 15ம் திகதிக்குள் (நவம்பர் 15) ஐசிசி T20 தரவரிசையில் முதல் ஆறு இடங்களை பிடிக்கும் அணிகளும் நேரடியாக சுப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும்.
இதில், மீதமுள்ள 4 அணிகள், இந்த ஆண்டு நடைபெறுவதை போன்று, முதல் சுற்றில் விளையாடி, சுப்பர் 12 சுற்றுக்கான தகுதியை பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கை அணியை பொருத்தவரை, அடுத்த ஆண்டு சுப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெறவேண்டுமானால், இம்முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறவேண்டும். அவ்வாறு, முன்னேறினால், ஐசிசி T20 தரவரிசையில் இலங்கை அணி 8வது இடத்தை பிடித்துக்கொண்டு சுப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்புள்ளது.
எவ்வாறாயினும், இம்முறை முதல் சுற்றில் தோல்வியடையும் அணிகள், அடுத்த ஆண்டு கிளோபல் T20 உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிகளில் விளையாடவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<