இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ருவான் கல்பகே, ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான ஓமான் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ருவான் கல்பகே தற்போது, தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார். இவ்வாறான நிலையில், எதிர்வரும் 3ம் திகதி ஓமான் அணியுடன் இவர் இணைந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக, இலங்கை அணியின் முன்னாள் வீரர் துலீப் மெண்டிஸ் செயற்பட்டு வருகின்றார்.
ருவான் கல்பகே பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுடன் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராக செயற்பட்டுள்ளதுடன், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி T20 உலகக்கிண்ண தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், ஓமான் அணியின் பயிற்றுவிப்பாளர் குழாமிலும் இருந்தார்.
அதேநேரம், ருவான் கல்பகே, இலங்கை அணிக்கு எதிராக எதிர்வரும் 7ம் மற்றும் 9ம் திகதிகளில் நடைபறெவுள்ள T20 தொடரிலும், ஓமான் அணியுடன் இணைந்து செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓமான் அணி T20 உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றில், குழு Bயில் இடம்பிடித்துள்ளதுடன் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து மற்றும் பபுவா நியூவ் கினியா போன்ற அணிகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<