டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டு விழா நடத்தப்படுவதை 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் எதிர்ப்பதாக திங்களன்று வெளியான புதிய கருத்துக் கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நோய் காரணமாக ஒரு வருடத்தால் பிற்போடப்பட்டுள்ள டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் 10 வாரங்களுக்கு குறைவான காலமே இருக்கின்றது.
எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன், பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும்.
ஒலிம்பிக்கை துரத்தும் கொரோனா: ஜப்பான் அதிகாரிகள் கவலை
இந்த நிலையில், நான்காவது கொவிட் அலை பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு ஜப்பான் போராடிவருவதுடன் அந்நாட்டு அரசு அவசர நிலையை மேலும் நீடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு ஒலிம்பிக் விளையாட்டு விழா தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் பரவுவதால் நாட்டின் சுகாதார கட்டமைப்பு பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளது. மருத்துவ தேவைகளில் பெருமளவு தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் இதன் காரணமாக நோயைக் கட்டுப்படுத்துவதில் பெருஞ்சிரமம் ஏற்படும் எனவும் மருத்துவ நிபுணர்கள் திரும்பத்திரும்ப கூறிவருகின்றனர்.
இதனிடையே, கடந்த வார இறுதியில் அசாஷி ஷிம்புன் நாளிதழினால் நடத்தப்பட்ட ஆய்வின்போது 43 சதவீதத்தினர் ஒலிம்பிக் விளையாட்டு விழா இரத்துச் செய்யப்படவேண்டும் என கோரியுள்ளதுடன், 40 சதவீதத்தினர் விழா மேலும் பிற்போடப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகியது வட கொரியா
ஒரு மாதத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வின்போது 35 சதவீதத்தினர் விழா இரத்துச் செய்யப்படவேண்டும் எனவும், 34 சதவீதத்தினர் விழா மேலும் பிற்போடப்படவேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழா நடத்தப்படுவதற்கு 14 சதவீதத்தினரே ஆதரவாக இருப்பதாக கருத்து கணிப்பு தெரிவிக்கின்றது. முன்னர் 28 சதவீதத்தினர் ஆதராவாக இருந்தனர்.
இதனிடையே, கியோடோ நியூஸ் நிறுவனத்தினால் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில் ஒலிம்பிக் விழா இரத்துச் செய்யப்படுவதை 59.7 வீதத்தினர் விரும்புவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்காவுக்கு ஒலிம்பிக் வரம் கிடைக்குமா?
எவ்வாறாயினும், விளையாட்டு வீரர்களை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்குட்படுத்துவது உட்பட தொற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாலும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை விதிப்பதாலும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பாதுகாப்பாக நடத்தமுடியும் என ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் போட்டியாளர்களாலும் அதிகாரிகளாலும் தொற்று பரவக்கூடும் என 87.7 வீதத்தினர் அஞ்சுவதாக கியோடோ நியூஸ் கருத்துக் கணிப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இந்த வாரம் வெளியாகும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<