மகளுக்கு மின்னல் என பெயரிட்ட உசைன் போல்ட்

321
Usain Bolt

உலகின் அதிவேக ஓட்ட வீரரான உசைன் போல்ட், தனது மகளுக்கு ஒலிம்பியா லைட்னிங் (மின்னல்) என வித்தியாசமான பெயர் சூட்டியுள்ளார்.

உலகின் மின்னல் வேக ஓட்ட வீரரான 33 வயதுடைய உசைன் போல்ட், 100 மீற்றர் ஓட்டத்தை 9.58 செக்கன்களில் கடந்து உலக சாதனை படைத்தவர் ஆவார். 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் சாதனைகள் புரிந்து தன்னிகரற்ற மெய்வல்லுனர் வீரராக திகழ்ந்தார்.

ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள அவர், 2008, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற 3 ஒலிம்பிக்கிலும் 100 மீற்றர், 200 மீற்றரில் தங்கப் பதக்கம் வென்று சாதனைகள் படைத்தார். அத்துடன், 2017 உலக சம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில், உசைன் போல்டின் நீண்ட நாள் காதலியான காசி பென்னட்டுக்கு கடந்த மே மாதம் 17 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. இந்த தகவல் அறிந்து அந்நாட்டு பிரதமர் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூகவலைத்தளங்களில் முதல் முறையாக உசைன் போல்ட் வெளியிட்டுள்ளார். 

அத்துடன், அவரது காதலியான காசி பென்னட்டின் பிறந்த நாளான ஜுலை 7 ஆம் திகதி குழந்தைக்கு ‘ஒலிம்பியா லைட்னிங் போல்ட்’ என்று வித்தியாசமான முறையில் பெயரிட்டுள்ளார்.  

குறிப்பாக, தனது காதலியின் 21 ஆவது பிறந்த நாள் அன்று  குழந்தையின் பெயரை வெளியிட்டுள்ள உசைன் போல்ட், ”என்னுடைய பெண் தோழி காசி பென்னெட்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூற விரும்புகிறேன். சிறந்த நாளை அவருடன் செலவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடைய மகள் ஒலிம்பியா லைட்னிங் போல்ட் உடன் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க