சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெவ்வேறான ஏழு அணிகளுக்கு எதிராக தனது முதல் 7 சதங்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து அணி வீரர் ஒல்லி போப் படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மான்செஸ்டர் மற்றும் லோர்ட்ஸில் நடைபெற்ற முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 325 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியின் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ஒல்லி போப் சதம் கடந்து 154 ஓட்டங்களையும், பென் டக்கெட் 86 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, நேற்றைய போட்டியின் 2ஆம் நாள் ஆட்;ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்களை எடுத்தது.
இந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்திய இங்கிலாந்து அணியின் தலைவர் ஒல்லி போப், 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான சாதனையொன்றை படைத்துள்ளார்.
- ஆஸி.க்கு எதிரான T20I தொடரிலிருந்து ஜோஸ் பட்லர் விலகல்
- 5 புதுமுக வீரர்களுடன் ஆஸி.யை சந்திக்கும் இங்கிலாந்து அணி
- இங்கிலாந்து ஒருநாள், T20I அணியின் பயிற்றுவிப்பாளராகும் மெக்கலம்!
இதில் அணித்தலைவராக, இங்கிலாந்துக்காக அதிவேக டெஸ்ட் சதம் அடித்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன் கடந்த 1990ஆம் ஆண்டு கிரஹாம் கூச் 96 பந்துகளில் சதமடித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஒல்லி போப் 102 பந்துகளில் சதமடித்து இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இது தவிர, இந்த சதமானது ஒல்லி போப்பின் 7ஆவது டெஸ்ட் சதமாகும். அதிலும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஏழு வௌ;வேறான அணிக்கு எதிராக தனது முதல் 7 சதங்களை அடித்த முதல் வீரர் எனும் புதிய வரலாறையும் படைத்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஒல்லி போப் முதல் டெஸ்ட சதத்தைப் பதிவுசெய்து 135 ஓட்டங்களைக் குவித்தார். அதன் பின் 2 ஆண்டுகள் கழித்து 2022ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக நொட்டிங்ஹம் மைதானத்தில் அவர் 145 ஓட்டங்களை அடித்தார். அதைத் தொடர்ந்து 2022 டிசம்பரில் பாகிஸ்தானுக்கு எதிராக ராவில்பிண்டி நகரில் 108 ஓட்டங்களை விளாசிய அவர் 2023 ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் 208 ஓட்டங்களை விளாசினார்.
அதைத் தொடர்ந்து 2024 ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக ஹைதராபாத்தில் 196 ஓட்டங்களை அடித்த ஒல்லி போப் தற்போது இலங்கைக்கு எதிராக 154 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதன் வாயிலாக 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 7 சதத்தையும் 7 வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக அடித்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையை ஒல்லி போப் படைத்துள்ளார். வரலாற்றில் வேறு எந்த வீரரும் தங்களது முதல் 7 சதங்களை 7 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<