நுவன் பிரதீப்புக்கு உபாதை : அசித பெர்ணான்டோவுக்கு அழைப்பு

699

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் போட்டித் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இளம் வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்ணான்டோ இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை அணிக்காக வேகப்பந்து வீச்சில் அண்மைக்காலமாக சிறப்பாகச் செயற்பட்டு வருகின்ற நுவன் பிரதீப், ஜிம்பாப்வே அணியுடன் நேற்று நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் 6 ஓவர்கள் பந்து வீசி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.  

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியுடனான போட்டி விபரம்

எனினும், எதிர்பாராத விதமாக ஜிம்பாப்வே அணி துடுப்பெடுத்தாடிய இறுதி 10 ஓவர்களில் பந்து வீச முற்பட்டபோது நுவன் பிரதீப் சிறு உபாதைக்குள்ளாகி மைதானத்திலிருந்து வெளியேறினார். இந்நிலையில் ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் மற்றும் இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள இந்திய தொரை கருத்திற்கொண்டு அவருக்கு ஓய்வளிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் தெரிவுக் குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

இதுதொடர்பில் ஜிம்பாப்வே அணியுடனான மூன்றாவது போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், “4ஆவது ஒருநாள் போட்டியில் வேண்டுமானால் நுவன் பிரதீப்பை விளையாடச் செய்யலாம். ஆனால் நாங்கள் அவ்வாறான சவாலுக்கு முகங்கொடுக்க விரும்பவில்லை. குறிப்பாக உடற்தகுதி ஆலோசகர் பிரதீப்பிற்கு ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். எனவே எஞ்சியுள்ள இரு போட்டிகளிலும் அவர் விளையாடமாட்டார்” என அவர் தெரிவித்தார்.

இதன்படி 19 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்ணான்டோவை இலங்கை அணியில் இணைத்துக்கொள்ள தெரிவுக்குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த வருடம் அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட அசித, அவ்வணியுடனான 3 டெஸ்ட் போட்டிகளிலும் இறுதி பதினொருவர் அணியில் இடம்பெறவில்லை. எனினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட மாகாணங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் 6 போட்டிகளில் கலந்துகொண்ட அவர் 12 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பங்களாதேஷ் பரீமியர் லீக் தொடரில் களமிறங்கவுள்ள நிரோஷன் திக்வெல்ல

இதேவேளை, முன்னதாக அறிவிக்கப்பட்ட இறுதி ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை குழாமில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் வைரஸ் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக லகிறு குமார இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

எனினும் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதிக்காக காத்திருந்த இலங்கை அணியின் மற்றுமொரு அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான நுவன் குலசேகரவுக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலும் நாளை நடைபெறவுள்ள 4ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியில் அவர் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.