உபாதைக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான நுவன் பிரதீப், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இடம்பெறவிருக்கும் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து வெளியேறியிருக்கின்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்குபற்றிய ஒருநாள் தொடரின் மூன்றாவதும் கடைசியுமான போட்டி நடைபெற்றிருந்தது. இப்போட்டியில், இலங்கை அணி வெற்றி பெற்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரினை 3-0 எனக் கைப்பற்றிய போதிலும், குறித்த போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான நுவன் பிரதீப் தசை உபாதைக்கு ஆளாகியிருந்தார். குறித்த உபாதை ஏற்பட்ட சந்தர்ப்பத்திலேயே மைதானத்தை விட்டு வெளியேறிய நுவன் பிரதீப், மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாகிய நிலையில் அடுத்து வரும் ஆறு வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் அணியில் ஒரு மாற்றத்துடன் T20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையில் இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட T20i தொடருக்கான இலங்கை குழாம் இன்று (27)
இதன் அடிப்படையிலேயே, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தை நுவன் பிரதீப் இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நுவன் பிரதீப் இல்லாத நிலையில், இலங்கை டி20 அணியில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்துவரும் இளம் வேகப்பந்துவீச்சாளரான அசித்த பெர்னாண்டோவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக, ThePapare.com இற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளரான அசந்த டி மெல் உறுதி செய்திருக்கின்றார்.
அதேநேரம், மணிக்கட்டில் சத்திர சிகிச்சை ஒன்றை எதிர்கொள்ளவிருக்கும் சகலதுறை வீரரான தனன்ஜய டி சில்வாவும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியிருக்கின்றார். எனினும், தனன்ஜய டி சில்வா இலங்கை, இந்த மாத இறுதியில் இங்கிலாந்து அணியுடன் விளையாடவுள்ள டெஸ்ட் தொடர் வரை தனது சத்திரசிகிச்சையை மேற்கொள்ளாமல் இருக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என நம்பப்படுகிறது. இதேவேளை, தனன்ஜய டி சில்வாவிற்கு பதிலாக இலங்கை டி20 அணியில் பிரதியீட்டு வீரர் ஒருவர் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீரர்களின் உபாதைகள் ஒருபுறமிக்க, இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாடும் இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடர் எதிர்வரும் வியாழக்கிழமை (04) பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை T20 குழாம் – லசித் மாலிங்க (அணித்தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாந்து, தசுன் ஷானக்க, அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் டிக்வெல்ல, திசர பெரேரா, குசல் மெண்டிஸ், ஷெஹான் ஜயசூரிய, வனிந்து ஹஸரங்க, லக்ஷான் சந்தகன், லஹிரு குமார, இசுரு உதான, அசித்த பெர்னாந்து
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க