இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர இன்று மாலை கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடவத்த, ரன்முதுகல பகுதியில் இடம்பெற்ற அபாயகரமான விபத்தொன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு இருந்தார்.
கொழும்பிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிளின் மீதே குலசேகரவின் வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 28 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.
பலத்த காயத்துக்கு உள்ளாகிய மோட்டார் வண்டியை செலுத்திய நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நபரின் உயிரிழப்பை அடுத்து கைது செய்யப்பட்ட நுவன் குலசேகர தற்போது பொலிஸ் நிலையத்தில் இருப்பதாகவும் நாளை விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் பிணையில் வெளியேறி உள்ளார்.
இலங்கை கிரிக்கட் அணியின் “இன்சுவிங்” மன்னன் என்று போற்றப்படும் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான நுவன் குலசேகர கடந்த ஜூன் மாதம் தான் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக விபத்தில் உயிரிழந்த 28 வயதான இளைஞரின் குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை இலங்கை கிரிக்கட் சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதோடு நுவன் குலசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடரிபில் குலசேகரவிடம் ஆரம்பக் கட்ட விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து ஏற்படக் காரணம் குலசேகர தனது ஜீப் வண்டியை செலுத்திக் கொண்டிருக்கும் போது அவருக்கு எதிரான திசையில் குறித்த மோட்டார் சைக்கிள் வண்டி ஓட்டுநர் பஸ் வண்டியை தாண்டிச் செல்ல முற்பட்ட வேளையில் கட்டுப்பாடின்றி குலசேகரவின் ஜீப் வண்டி சென்ற பாதையில் குறிக்கிட்டதன் மூலமே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று தெரிய வருகிறது.
இந்நிலையில் நுவன் குலசேகர கடவத்த பிரதான நீதவானிடமிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டு கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.