ஐக்கிய அரபு இராச்சியம் அணிக்கு எதிராக டுபாயில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான பங்களாதேஷ் அணியை வழிநடத்தும் பொறுப்பு விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான நூருல் ஹசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
T20 உலகக் கிண்ணத்திற்கு முன் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு இராச்சியம் அணியுடன் 2 போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடவுள்ளது.
இந்த நிலையில், குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள 17 பேர் கொண்ட பங்களாதேஷ் அணிக்குழாம் விபரத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
இதில் சிறப்பம்சம் என்னவெனில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்துக்காக பெயரிடப்பட்ட குழாத்தில் இருந்து சில மாற்றங்களுடன் பங்காளதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- T20 உலகக்கிண்ணத்துக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு
- புவனேஷ்வர் குமாரை பின்தள்ளிய மஹீஷ் தீக்ஷன!
- டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மைதானங்கள் அறிவிப்பு
மேற்கிந்திய தீவுகளில் தற்போது நடைபெற்று வருகின்ற கரீபியன் பிரீமியர் லீக்கில் அமேசன் வொரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்ற பங்களாதேஷ் T20I அணித்தலைவர் சகிப் அல் ஹசன், இந்தத் தொடரில் விளையாட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, 28 வயதான விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான நூருல் ஹசன், ஐக்கிய அரபு இராச்சியம் அணிக்கெதிரான T20I தொடரில் பங்களாதேஷ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நிறைவடைந்த ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரின் போது கைவிரல் காயத்துக்குள்ளாகிய நூருல் ஹசனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக அவருக்கு இம்முறை ஆசியக் கிண்ணத்தில் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை.
எவ்வாறாயினும், காயத்தில் இருந்து பூரண குணமடைந்த அவரை ஐக்கிய அரபு இராச்சியம் அணிக்கெதிரான T20I தொடரில் இணைத்துக் கொள்ள அந்நாட்டு தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தவிர, T20 உலகக் கிண்ணத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட நான்கு மேலதிக வீரர்களில் மூவர் ஐக்கிய அரபு இராச்சியம் அணிக்கெதிரான T20I தொடருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, சௌமிய சர்கார், ரிஷாட் ஹொசைன் மற்றும் ஷொரிபுல் இஸ்லாம் ஆகிய வீரர்களுக்கு பங்களாதேஷ் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் 20 வயதான லெக் ஸ்பின் சுழல் பந்துவீச்சாளரான ரிஷாட் ஹொசைன், சகிப் அல் ஹசனுக்குப் பதிலாக மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
பங்களாதேஷ் – ஐக்கிய அரபு இராச்சியம் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட T20I தொடர் இம்மாதம் 25 மற்றும் 27ஆம் திகதியில் டுபாயில் நடைபெறவுள்ளது.
பங்களாதேஷ் அணி விபரம்:
நூருல் ஹசன் (தலைவர்), சபீர் ரஹ்மான், மெஹிதி ஹசன் மிராஸ், ஆபிப் ஹொசைன், மொசாடிக் ஹொசைன், லிட்டன் தாஸ், யாசிர் அலி, முஸ்தபிசூர் ரஹ்மான், மொஹமட் சைபுதீன், தஸ்கின் அஹமட், எபாடெட் ஹொசைன், ஹசன் மஹ்மூத், நஜ்முல் ஹொரசைன் சாண்டோ, நசும் அஹ்மட், ஷொரிபுல் இஸ்லாம், சௌமிய சர்கார், ரிஷாட் ஹொசைன்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<