இலங்கை கிரிக்கெட் சபையினால் முதல் முறையாக ஏற்பாடு செய்த அங்குரார்ப்பண தேசிய சுபர் லீக் (NSL) நான்கு நாள் கிரிக்கெட் தொடரானது பல வீரர்களின் திறமை வெளிப்படுத்தலுடன் நிறைவுக்கு வந்தது.
கொழும்பு, காலி, கண்டி, தம்புள்ள மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 5 அணிகள் பங்குகொண்ட இந்தப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் தனன்ஜய டி சில்வா தலைமையிலான யாழ்ப்பாண அணியை வீழ்த்தி கமிந்து மெண்டிஸ் தலைமையிலான கண்டி அணி சம்பியனாகத் தெரிவாகியது.
இதுஇவ்வாறிருக்க, அங்குரார்ப்பண தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் ஒட்டுமொத்தமாக 350 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன. அதிகபட்சமாக கொழும்பு அணியின் பிரபாத் ஜயசூரிய 24 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
அத்துடன், பிரபாத் ஜயசூரியவும், தம்புள்ள அணியின் மாலிந்த புஷ்பகுமாரவும் தலா 3 தடவைகள் 5 விக்கெட் குவியலை எடுத்து அசத்த, மேலும் 7 வீரர்கள் 5 விக்கெட் குவியலை எடுத்தனர்.
>>NSL தொடரின் சம்பியனாக மகுடம் சூடியது கண்டி அணி
அத்துடன், தம்புள்ள அணியில் மலிந்த புஷ்பகுமார 30 ஓட்டமற்ற ஓவர்களை அதிகபட்சமாக வீழ்த்த, ஜப்னா அணியின் நுவன் பிரதீப், தம்புள்ள அணிக்கெதிரான போட்டியில் 52 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் சிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவுசெய்த வீரராக இடம்பிடித்தார்.
மேலும், ஆறு வாரங்களாக நடைபெற்ற இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் 47 பந்துவீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக பந்துவீசியிருந்ததுடன், அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் 10 பந்துவீச்சாளர்களில் ஒரு வேகப் பந்துவீச்சாளரும், 9 சுழல் பந்துவீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளனர்.
இதில் 5 பந்துவீச்சாளர்கள் இலங்கை டெஸ்ட் அணிக்காக விளையாடிய வீரர்களான உள்ளதுடன், 5 பேர் முதல்தரப் போட்டிளில் விளையாடி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற வீரர்கள் ஆவர்.
இந்த நிலையில், இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட முதல் ஐந்து இடங்களில் இடம்பிடித்த பந்துவீச்சாளர்கள் யார்? என்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
பிரபாத் ஜயசூரிய (26 விக்கெட்)
இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக கொழும்பு அணியின் சுழல் பந்துவீச்சாளரான பிரபாத் ஜயசூரிய இடம்பிடித்தார்.
இவரது கட்டுக்கோப்பான, நெருக்கடியளிக்கும் சுழல் பந்துவீச்சு கொழும்பு அணிக்கு லீக் போட்டிகளில் வெற்றிபெற உதவியது. குறிப்பாக அந்த அணி விளையாடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றியீட்டியிருந்ததுடன், அந்த வெற்றிகளில் பிரபாத்தின் பங்களிப்பு முக்கிய இடம் வகித்தது. இதில் அவரது பந்துவீச்சு சராசரி 3.58 ஆக காணப்பட்டதுடன், இந்தத் தொடர் முழுவதும் கிட்டத்தட்ட 160 ஓவர்கள் பந்துவீசி 27 ஓட்டமற்ற ஓவர்களுடன் 576 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.
அதுமாத்திரமின்றி, காலி அணிக்கெதிராக நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் 111 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி, இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் பெற்றுக்கொண்டார். அதேநேரம், மூன்று தடவைகள் 5 விக்கெட் குவியலையும் எடுத்து அசத்தியிருந்தார்.
எனவே, இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய பிரபாத் ஜயசூரிய, 26 விக்கெட்டுக்களை வீழ்த்தி அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.
>>NSL தொடரில் ஜொலித்த துடுப்பாட்ட வீரர்கள்
இதேநேரம், இலங்கை அணி அடுத்த மாதம் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 23 பேர் கொண்ட உத்தேச குழாத்தில் பிரபாத் ஜயசூரிய இடம்பெறவில்லை.
கடந்த 2012 முதல் முதல்தரப் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருகின்ற 30 வயதான இடதுகை சுழல் பந்துவீச்சாளரான பிரபாத் ஜயசூரிய உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி இருந்தாலும் இதுவரை அவருக்கு இலங்கை டெஸ்ட் அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை.
குறிப்பாக, இலங்கை டெஸ்ட் குழாத்தில் லசித் எம்புல்தெனிய மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகிய இரண்டு இடதுகை சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளதால் பிரபாத் ஜயசூரியவுக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்.
எவ்வாறாயினும், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கை டெஸ்ட் அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பு அவருக்கு கிடைக்க வேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பாகும்.
இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட பிரபாத் ஜயசூரிய, இதுவரை 2 ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாலிந்த புஷ்பகுமார (24 விக்கெட்)
இலங்கை டெஸ்ட் அணிக்காக விளையாடிய அனுபவமிக்க சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான மாலிந்த புஷ்பகுமார, இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீர்ர்களில் 2ஆவது இடத்தைப் பிடித்தார். 4 போட்டிகளில் விளையாடிய அவர் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பந்துவீச்சு சராசரி 2.88 ஆகும்.
இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் தம்புள்ள அணிக்காக மாலிந்த விளையாடியிருந்தார். எனினும், அந்த அணி லீக் போட்டிகளில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்காவிட்டாலும் அந்த அணிக்காக பந்துவீச்சில் பிரகாசித்த ஒரேயொரு பந்துவீச்சாளர் மாலிந்த புஷ்பகுமார தான்.
கொழும்பு அணிக்கெதிரான முதல் போட்டியில் 5 விக்கெட் குவியலை எடுத்த அவர், கண்டி அணிக்கெதிரான 8ஆவது லீக் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 120 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
இலங்கை அணியில் உள்ள மற்றுமொரு இடதுகை சுழல் பந்துவீச்சாளரான 35 வயதுடைய மாலிந்த புஷ்பகுமார, 2017ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியதுடன், அதே டெஸ்ட் தொடரில் கடைசியாக விளையாடி இருந்தார்.
ரங்கன ஹேரத் தொடர்ச்சியாக இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடி வந்ததால் மாலிந்தவுக்கு இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல, அவர் ரங்கன ஹேரத்தின் ஓய்வோடு லசித் எம்புல்தெனிய மற்றும் கடந்த ஆண்டு பிரவீன் ஜயவிக்ரமவும் இலங்கை டெஸ்ட் குழாத்தில் இடம்பிடித்ததால் மாலிந்த புஷ்பகுமாரவின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.
எனவே, 35 வயதான மாலிந்தவுக்கு எதிர்காலத்தில் இலங்கை டெஸ்ட் குழாத்தில் இடம்பிடிப்பது ஒரு கடினமான விடயம் தான்.
அசித்த பெர்னாண்டோ (17 விக்கெட்)
இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் கண்டி அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றதில் அசித்த பெர்னாண்டோவுக்கு முக்கிய பங்கு உண்டு.
அந்த அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
கண்டி அணிக்காக முதல் லீக் போட்டியிலிருந்து விக்கெட்டுகளை வீழ்த்திய அசித்த, காலி அணிக்கெதிரான அரை இறுதிப் போட்டியில் 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும், அதற்கு முன்னதாக நடைபெற்ற தம்புள்ள அணிக்கெதிரான கடைசி லீக் போட்டியில் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
24 வயதுடைய வலதுகை வேகப் பந்துவீச்சாளரான அசித்த பெர்னாண்டோ, முன்னதாக நடைபெற்ற இம்முறை தேசிய சுபர் லீக் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் கண்டி அணிக்காக விளையாடி பந்துவீச்சில் அசத்தியிருந்தார்.
இலங்கை 19 வயதின்கீழ் அணி, இலங்கை 23 வயதின் கீழ் அணி மற்றும் இலங்கை A அணிகளுக்காக விளையாடிய அசித்த பெர்னாண்டோ, 2017ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை தேசிய அணிக்காக அறிமுகமானார். அதேபோல, கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
>>இலங்கை டெஸ்ட் குழாத்தில் மீண்டும் மொஹமட் சிராஸ்
சுரங்க லக்மால், கசுன் ராஜித, துஷ்மன்த சமீர உள்ளிட்ட வீரர்கள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இலங்கை டெஸ்ட் அணியில் விளையாடிய காரணத்தால் அசித்த பெர்னாண்டோவுக்கு இலங்கை அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், தற்போது சுரங்க லக்மால் ஓய்வுபெற்றுள்ளதால் அவரது இடத்தை நிரப்புகின்ற அரிய வாய்ப்பு அவருக்கு கிடைக்கவுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை அணி அடுத்த மாதம் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 23 பேர் கொண்ட உத்தேச குழாத்தில் அசித்த பெர்னாண்டோவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அஷைன் டேனியல் (16 விக்கெட்)
இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற கண்டி அணியின் முக்கிய துரும்புச்சீட்டாக விளங்கிய பந்துவீச்சாளர்களில் மற்றுமொரு வீரர் தான் அஷைன் டேனியல்.
அந்த அணிக்காக 5 போட்டிகளில் விளையாடிய அவர், 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் தம்புள்ள அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் 75 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியிருந்தார்.
மருதானை புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவரான 21 வயது வலதுகை சுழல் பந்துவீச்சாளரான அஷைன் டேனியல் இலங்கை 19 வயதின் கீழ் அணிக்காக விளையாடிய வீரர் ஆவார்.
முன்னதாக, கடந்த பெப்ரவரி மாத முற்பகுதியில் நிறைவடைந்த தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அஷைன் டேனியலுக்கு இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியது.
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான T20 தொடரில் உபாதைக்குள்ளாகிய ரமேஷ் மெண்டிஸ் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை தவறவிட்டார். இதன்காரணமாக அவருக்குப் பதிலான அஷைன் டேனியில் இலங்கை டெஸ்ட் குழாத்தில் பெயரிடப்பட்டார். எனினும், துரதிஷ்டவசமாக விசா பிரச்சினை காரணமாக அவருக்கு அந்த டெஸ்ட் தொடரில் விளையாட முடியாமல் போனது.
>>யாழ்ப்பாண அணியை பந்துவீச்சில் மிரட்டிய எம்புல்தெனிய மற்றும் அஷைன்
எவ்வாறாயினும், தற்போது நிறைவுக்கு வந்த தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர்களில் அஷைன் டேனியல் 4ஆவது இடத்தைப் பிடித்தாலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ்அணிக்கெதிராக நடைபெறுகின்ற 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 23 பேர் கொண்ட உத்தேச குழாத்தில் அவர் இடம்பெறவில்லை.
எனினும், அடுத்த மாத முற்பகுதியில் நடைபெறவுள்ள இலங்கை வளர்ந்து வரும் அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள 32 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் அஷைன் டேனியலுக்கு வாய்ப்பு வழங்க தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சானக ருவன்சிறி (15 விக்கெட்)
இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் காலி அணிக்காக விளையாடிய சானக்க ருவன்சிறி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் 5ஆவது இடத்தைப் பிடித்தார். 4 போட்டிகளில் விளையாடிய அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
காலி அணியை அரை இறுதிப் போட்டி வரை அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்த சானக்க, தம்புள்ள அணிக்கெதிரான லீக் போட்டியில் 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பெற்றுக்கொண்டார். எனினும், குறித்த போட்டியில் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
32 வயதான வலதுகை சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான இவர், 2009 ஆம் ஆண்டு முதல் லிஸ்ட் A போட்டிகளிலும், 2011ஆம் ஆண்டு முதல் முதல்தரப் போட்டிகளிலும் விளையாடி வருகின்றார்.
இவர்கள் தவிர நடப்பு தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் லக்ஷித மானசிங்க (கொழும்பு – 15 விக்கெட்), தனன்ஜய டி சில்வா (யாழ்ப்பாணம் – 14 விக்கெட்), அகில தனன்ஜய (காலி – 14 விக்கெட்), துவிந்து திலகரட்ன (யாழ்ப்பாணம் – 13 விக்கெட்), சுமிந்த லக்ஷான் (காலி – 13 விக்கெட்) ஆகிய வீரர்கள் பந்துவீச்சில் திறமைகளை வெளிப்படுத்திய முதல் 6 முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல, தேசிய சுபர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் தொடரில் நுவன் பிரதீப், கசுன் ராஜித, ஜெப்ரி வெண்டர்சே, துனித் வெல்லாலகே உள்ளிட்ட வீரர்களும் பந்துவீச்சில் அசத்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<