இவ்வருடம் நடைபெறவுள்ள 46ஆவது தேசிய விளையாட்டு விழாவில் திறமைகளை வெளிப்படுத்தும் 10 வீரர்களுக்கு வெளிநாட்டில் சென்று பயிற்சிகளைப் பெறுவதற்கான புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து வினையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள 46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் எஞ்சிய போட்டிகள் அனைத்து ஒக்டோபர் மாதம் முதல் நடைபெறவுள்ளன.
தேசிய விளையாட்டு விழா வேகநடை, சைக்கிளோட்டம், மரதன் போட்டிகள் ஒக்டோபரில்
இந்த நிலையில். இவ்வருடம் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்ச்சிகளான மெய்வல்லுனர் உள்ளிட்ட போட்டிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதில் குறிப்பாக, சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் சுவட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.
இதன்படி, இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் பெரும்பாலான போட்டிகளை எந்தவொரு விழாக்களுமோ அல்லது களியாட்ட நிகழ்வுகளுமோ இல்லாமல் திறமைகளுக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுத்து நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இம்முறை விளையாட்டு விழாவில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற 10 வீரர்களுக்கு வெளிநாட்டில் சென்று பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட புலமைப்பரிசில் ஒன்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
தரம் 8 முதல் விளையாட்டுப் பாடசாலைகளுக்கான மாணவர் அனுமதி
இதுதொடர்பில் விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய கருத்து வெளியிடுகையில்,
“ஒவ்வொரு வருடத்திலும் நாங்கள் தேசிய விளையாட்டு விழாவுக்கான பல கோடி ரூபா பணத்தை ஒதுக்கி வருகின்றோம். ஆனால், இம்முறை விளையாட்டு விழாவில் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை வீரர்களின் திறமைகளை இனங்கண்டு அதை மேலும் ஊக்குவிப்பதற்காக 3 வருடங்களைக் கொண்ட வெளிநாட்டு புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.
குறிப்பாக, தேவையில்லாத களியாட்டங்கள் மற்றும் அலங்காரகங்களுக்காக ஒதுக்குகின்ற பணத்தை வீரர்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆலொசனை வழங்கியுள்ளார்” என அவர் தெரிவித்தார்.
Video – விளையாட்டில் அரசியல் துடைத்தெறியப்படும்..! Namal Rajapaksa
எனவே, சர்வதேசத்தை வெல்லக்கூடிய திறமையான வீரர்களை இனங்கண்டு, அந்த வீரர்களுக்கு விசேட பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதுஇவ்வாறிருக்க, கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் எஞ்சிய அனைத்துப் போட்டிகளையும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
அந்த வகையில், இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் மாவட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டிகள் அனைத்தும் தற்போது நடைபெற்று வருவதுடன், மாகாண மட்டப் போட்டிகளை ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்கு முன் நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்து மாகாணங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, 46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான வேகநடை, சைக்கிளோட்டம் மற்றும் மரதன் ஆகிய போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம், 11ஆம் திகதிகளில் கதரகமவில் நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க