தனக்கு எவ்வாறு கொவிட்-19 தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் தெரியவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் (03) இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்ன மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.
ஒருநாள் தொடருக்காக பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை அணி!
அணியின் உறுப்பினர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதால், நாளைய தினம் (05) நடைபெறவிருந்த வீரர்களுக்கான உடற்தகுதி பரிசோதனை நிறுத்தப்பட்டதுடன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரும் ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.
இந்தநிலையில், டுவிட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள மிக்கி ஆர்தர், தனக்கு எவ்வாறு கொவிட்-19 தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் அறியமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில்,
“எனது உடல்நிலை தொடர்பில் கேட்டறிந்த அனைவருக்கும் நன்றி. எனக்கு COVID-19 தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பில் தெரியவில்லை. ஏனெனில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு நான் பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஆனால் அனைவரையும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Thank you to everybody who has sent their wishes….not sure how I picked up Covid because I have not done much post the England series but just shows to everybody be careful and stay safe!
— Mickey Arthur (@Mickeyarthurcr1) February 4, 2021
இலங்கை தேசிய அணியின் 36 வீரர்கள் கொண்ட குழாம், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக மூன்று குழுக்களாக பிரிந்து பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், தற்போது எழுந்துள்ள கொவிட்-19 தொற்று பிரச்சினை காரணமாக கிரிக்கெட் அணியின் பணிகள் சற்று தாமதமடைந்து வருகின்றன.
கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள மிக்கி ஆர்தர் மற்றும் லஹிரு திரிமான்னே ஆகியோர், இலங்கை அரசாங்கத்தின் கொவிட்-19 கொள்கையின் கீழ் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும், தற்போதைய சூழ்நிலையில், தொடர் சற்று காலதாமதமாக இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<