ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டாவது தடவையாக நடைபெற்று வந்த ஆறு அணிகளுக்கு இடையிலான T10 லீக் கிரிக்கெட் தொடரின் சம்பியன் கிண்ணத்தை டெரன் சமி தலைமையிலான நோர்தென் வொரியர்ஸ் அணி வென்றுள்ளது.
T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது
ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர்ந்தும் …
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், சஹீட் அப்ரிடி தலைமையிலான பக்தூன்ஸ் மற்றும் டெரன் சமி தலைமையிலான நோர்தென் வொரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய நோர்தென் வொரியர்ஸ் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பக்தூன்ஸ் அணியின் தலைவர் சஹீட் அப்ரிடி, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை நோர்தென் வொரியர்ஸ் அணிக்கு வழங்கினார்.
இதன்படி களமிறங்கிய நோர்தென் வொரியர்ஸ் அணி, அன்ட்ரு ரசல் மற்றும் ரோவ்மன் பவெல் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்ட வெளிப்படுத்தல்கள் ஊடாக 10 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 140 ஓட்டங்களை குவித்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய லெண்டல் சிம்மன்ஸ் (5) மற்றும் நிக்கோலஸ் பூரன் (18) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
எனினும், அடுத்து களமிறங்கிய ரோவ்மன் பவெல் அதிரடியாக ஓட்டங்களை குவித்து எதிரணிக்கு நெருக்கடியை வழங்க, அவருடன் இணைந்த அன்ட்ரூ ரசல் சிக்ஸர்கள் விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தார். ரோவ்மன் பவேல் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களை குவிக்க, ரசல் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவர்களுக்கு அடுத்ததாக களமிறங்கிய அணித் தலைவர் டெரன் சமி 14 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பந்து வீச்சில் பக்தூன்ஸ் அணி சார்பில் சஹீட் அப்ரிடி 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.
பின்னர், வெற்றியிலக்காக 141 ஓட்டங்களை கொண்டு களமிறங்கிய பக்தூன்ஸ் அணி சார்பில், அன்ட்ரூ பிளட்ச்சர் மற்றும் சபிகுல்லா ஆகியோர் மாத்திரம் ஓரளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அந்த அணி 10 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 118 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
டி-10 கிரிக்கெட் தொடரில் விளையாட தசுன் சானக்க ஒப்பந்தம்
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை …
பிளட்ச்சர் 18 பந்துகளுக்கு 37 ஓட்டங்களையும், சபிகுல்லா 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, கிரிஸ் கிரீன் மற்றும் ஹெர்டஸ் வில்ஜியோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதேவேளை இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக ரோவ்மன் பவெல் தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடர் நாயகனாக ஹெர்டஸ் வில்ஜியோன் தெரிவுசெய்யப்பட்டார்.
இதேவேளை, நோர்தென் வொரியர்ஸ் அணி தங்களுடைய முதல் சம்பியன் கிண்ணத்தை இம்முறை வென்றுள்ளதுடன், கடந்த வருடம் கேரளா நைட்ஷ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டி சுருக்கம்
நோர்தென் வொரியர்ஸ் – 140/3 (10), ரோவ்மன் பவெல் 61 (25), அன்ட்ரூ ரசல் 38 (12), சஹீட் அப்ரிடி 21/1
பக்தூன்ஸ் – 118/7 (10), அன்ட்ரூ பிளட்ச்சர் 37 (18), சபிகுல்லா 26 (16), கிரிஸ் கிரீன் 11/2, ஹெர்டஸ் வில்ஜியோன் 24/2
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<