வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நடப்பு வருடத்திற்கான கரப்பந்தாட்ட போட்டிகள் யாழ்ப்பாணம், நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இடம்பெற்று நிறைவடைந்துள்ளன.
இந்த சுற்றுப் போட்டியில் 20 வயதின் கீழ் ஆண்கள் பெண்கள், 18 வயதின் கீழ் ஆண்கள் பெண்கள் மற்றும் 16 வயதின் கீழ் ஆண்கள் பெண்கள் என மொத்தம் ஆறு பிரிவுகளின்கீழ் போட்டிகள் இடம்பெற்றன.
மூன்றாம் இடத்தை தவறவிட்ட இலங்கை இளையோர் அணி
வட மாகாண கரப்பந்தாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் கழக அணிகள் காணப்படும் கோப்பாய் கல்விக் கோட்டத்தினர் மிக நீண்ட காலமாக பாடசாலை மட்டப் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எனினும், கோப்பாய் கோட்டத்தின் ஆதிக்கமானது கடந்த சில வருடங்களாக உடைத்தெறியப்பட்டு வெற்றியினை மாகாணத்தின் சகல பகுதிகளைச் சேர்ந்த அணிகளும் பகிர்ந்து வருகின்றன.
அதேவேளை, ஒரு சில வலயங்களைச் சேர்ந்த அணிகள் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய மிக நீண்ட காலமாகத் திணறி வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
20 வயதிற்குட்பட்டோர் ஆண்கள் பிரிவு
இறுதிப் போட்டி
அரையிறுதிப் போட்டியில் வவுனியா ஸ்ரீ சுமண மகா வித்தியாலய அணியினை 2:0 என்ற நேர் செற்களில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்திருந்தது சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணி. மறுமுனையில் பரபரப்பான போட்டியில் 2:1 என மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலய அணியை வீழ்த்தி புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி அணியினர் இறுதி மோதலில் களங்கண்டனர்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமான இப்போட்டியின் முதலாவது செற் சம புள்ளிகளுடன் நகர்ந்தது. ஒரு கட்டத்தில் அபாரங்காட்டிய விக்டோரியாவின் வீரர்கள் நேர்த்தியான அறைதல்கள் மூலம் தம்பக்கம் புள்ளிகளை விரைவாக சேகரிக்கத் தொடங்கினர். இறுதியில் 25:21 என விக்டோரியா கல்லூரி அணியினர் முதல் செற்றினை தமதாக்கினர்.
இதன் காரணமாக போட்டியை தக்கவைப்பதற்கு இரண்டாவது செற்றில் அவசியம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது சோமஸ்கந்தா கல்லூரி அணி.
போட்டியின் முதல் நாள் புகைப்படங்கள்
இரண்டாவது செற்றிலும் இரு அணி வீரர்களும் சிறந்த பணித்தல்கள், அறைதல்கள், தடுப்புகள் மற்றும் காப்புகள் என அனைத்துத் துறைகளிலும் சிறந்த முறையில் தமது திறமையைக் காண்பித்தனர். இதனால் முதலாவது செற்றை போன்றே நகர்ந்தது இரண்டாவது செற்றும். சோமஸ்கந்தா வீரர்களின் அதிகமான அறைதல்கள் எல்லைக் கோட்டிற்கு வெளியே செல்ல, இரண்டாவது செற்றினையும் 25:22 என கைப்பற்றி 2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தைத் தமதாக்கியது சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி.
Thepapare.comஇன் ஆட்ட நாயகன் – சிறிமோகன் சணோஜன் (சுழிபுரம் விக்டோரியா கல்லூரி)
மூன்றாம் இடத்திற்கான போட்டி
வவுனியா ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம் மற்றும் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய அணிகள் மோதிய இப்போட்டி, விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாது இடம்பெற்றிருந்தது.
முதலாவது செற்றினை ஸ்ரீ சுமண அணி 25:23 என தமதாக்க, தொடர்ச்சியாக இடம்பெற்ற இரண்டு செற்களையும் முறையே 25:13, 25:22 என கைப்பற்றி அபார வெற்றிபெற்றது எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயம்.
18 வயதிற்குட்பட்டடோர் ஆண்கள் பிரிவு
இறுதிப் போட்டி
அரையிறுதிப் போட்டியில் முறையே ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம் மற்றும் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம் ஆகிய அணிகளை 2:1 என்ற செற் கணக்கில் வெற்றிகொண்ட ஆவரங்கால் மகாஜனா வித்தியாலய அணியும், புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி அணியும் இறுதிப் போட்டியில் மோதின.
முதலாவது செற்றில் உத்வேகத்துடன் ஆடிய மகாஜனா வித்தியாலய அணி வீரர்கள் காற்றின் சாதகத்தன்மையும் கிடைக்க 25:12 என குறித்த செற்றை தமதாக்கினர். இரண்டாவது செற்றில் அவ்வாறே சோமஸ்கந்தா கல்லூரி அணிக்கும் அதே சாதகம் கிடைக்க, அவ்வணி வீரர்கள் சிறப்பாக செயற்பட்டு 25:13 என இரண்டாவது செற்றை தமதாக்கினர்.
தீர்மானம்மிக்க மூன்றாவதும் இறுதியுமான செற்றினை 25:19 என கைப்பற்றி 2:1 என்ற செற் கணக்கில் வெற்றியை தமதாக்கினர் ஆவரங்கால் மகாஜனா வித்தியாலய அணியினர்.
Thepapare.comஇன் ஆட்ட நாயகன் – சிவனேஸ்வரன் சரண்ஜன் (ஆவரங்கால் மகாஜனா வித்தியாலயம்)
மூன்றாம் இடத்திற்கான போட்டி
இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம், வவுனியா ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம் ஆகிய அணிகள் மோதிய இப்போட்டியில் 25:20,21:16 என தொடர்ச்சியாக இரண்டு செற்களையும் இலகுவாகக் கைப்பற்றி மூன்றாம் இடத்தை தமதாக்கியது ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம்.
16 வயதிற்குட்பட்டோர் ஆண்கள் பிரிவு
இறுதிப் போட்டி
ஸ்ரீ சுமண மகா வித்தியாலய அணியை 2:1 என அரையிறுதியில் வீழ்த்திய புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி அணியும், அவ்வாறே ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய அணியை 2:1 என வெற்றிபெற்ற கோப்பாய் மகா வித்தியாலய அணியும் 16 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் களங்கண்டிருந்தன.
இந்த மோதலில் நேர்த்தியான அறைதல்களை மேற்கொண்ட கோப்பாய் மகா வித்தியாலய அணி முதலாவது செற்றினை 25:16 என தமதாக்கியது. இரண்டாவது செற்றில் நுட்பமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய சோமஸ்கந்தா கல்லூரி அணி 25:10 என பதிலடி கொடுத்தது.
போட்டியின் முதல் நாள் புகைப்படங்கள்
தீர்மானம்மிக்க இறுதி செற்றில் இரு அணிகளும் சிறந்த அறைதல்களுடன் பலத்த போராட்டத்தை வெளிப்படுத்தின. இறுதியில் 25:20 என மூன்றாவது செற்றைக் கைப்பற்றிய கோப்பாய் மகா வித்தியாலய அணி 2:1 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனாகியது.
Thepapare.comஇன் ஆட்ட நாயகன் – வரதராஜா வாசுதன் (கோப்பாய் மகா வித்தியாலயம்)
மூன்றாம் இடத்திற்கான போட்டி
வவுனியா ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம், ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம் ஆகிய அணிகள் மோதிய இப்போட்டியை 25:16, 25:19 என தொடர்ச்சியாக இரண்டு செற்களையும் கைப்பற்றிய ஸ்ரீ சுமண வித்தியாலய அணி 2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தினைத் தமதாக்கியது.
பெண்கள் பிரிவு
20 வயதிற்குட்பட்டோர்
முதலாம் இடம் – யா/பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை
இரண்டாம் இடம் – கிளி/பளை மத்திய கல்லூரி
மூன்றாம் இடம் – யா/ இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம்
18 வயதிற்குட்பட்டோர்
முதலாம் இடம் – யா/வயாவிளான் மத்திய கல்லூரி
இரண்டாம் இடம் – யா/ சென். தோமஸ் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
மூன்றாம் இடம் – யா/ உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்
16 வயதிற்குட்ட்டோர்
முதலாம் இடம் – யா/உரும்பிராய் சைவத்தாமிழ் வித்தியாலயம்
இரண்டாம் இடம் – யா/கோப்பாய் மகா வித்தியாலயம்
மூன்றாம் இடம் – மு/கலைமகள் வித்தியாலயம்