வட மாகாண பாடசாலைகள் மெய்வல்லுனரில் மிதுன்ராஜுக்கு ஹெட்ரிக் தங்கம்

308

வட மாகாண கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள 2019ஆம் ஆண்டிற்கான வடக்கு மாகாண பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் நேற்று (06) யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் நடைபெற்றன.

இதில் அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் மைதான நிகழ்ச்சிகளில் பதக்கங்களை வென்று வருகின்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் சுசிந்திரகுமார் மிதுன்ராஜ், ஹெட்ரிக் தங்கம் வென்று அசத்தினார். 

வட மாகாண பாடசாலைகள் மெய்வல்லுனரில் புவிதரன், சுவர்ணாவுக்கு தங்கம்

மைதான நிகழ்ச்சிகளான குண்டு எறிதல், தட்டெறிதல் மற்றும் ஈட்டி எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வருகின்ற பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ், இன்று காலை நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 52.91 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். 

குறித்த போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன் பி.ஏ கஜன் 50.75 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த எம். ஹேமதூஷான் 46.57 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதனையடுத்து நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பங்குகொண்ட மிதுன்ராஜ், 45.58 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.

இந்தப் போட்டியில் விக்கேஸ்வரா கல்லூரி மாணவன் எம். திவன்சன் (37.94 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், யாழ். இந்துக் கல்லூரி மாணவன் கே. அட்சயான் (35.95 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர். 

இந்த நிலையில், 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட மிதுன்ராஜ், தங்கப் பதக்கம் வென்று மகாஜனா கல்லூரிக்காக மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.

குறித்த போட்டியில் 14.57 மீற்றர் தூரத்தை எறிந்த அவர், வர்ண சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, அதே கல்லூரியைச் சேர்ந்த எம். நிதிலன் (12.22 மீற்றர்) இரண்டாவது இடத்தையும், வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த வி. வசீகரன் (12.08 மீற்றர்) மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர். 

இன்று நடைபெற்ற மைதான நிகழ்ச்சிகளில் ஹார்ட்லி கல்லூரி மாணவர்கள் மேலும் 4 பதக்கங்களை வென்றனர். இதில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பங்குகொண்ட வி. சனூஜன், 35.68 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தையும், டி. அபிஷாந்த், 31.45 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

இதேவேளை, 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட மகாஜனா கல்லூரி மாணவர்களான ஏ. தஸான் சுஜிஸ்டன் 13.04 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தையும், ஆர். மனுசுதன் 10.36 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

அரையிறுதியில் மலேஷிய வலைப்பந்து அணியிடம் தோல்வியை தழுவிய இலங்கை

மகாஜனா மாணவர்கள் ஆதிக்கம்

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் மகாஜனாக் கல்லூரி 6 தங்கம், 8 வெள்ளி, 2 வெண்கலம் என 16 பதக்கங்களை பெற்றுள்ளது. நேற்றைய இரண்டாம் நாள் நிறைவில் 8 பதக்கங்களை வென்ற மகாஜனா, இன்று மூன்றாம் நாள் நிறைவில் மேலும் 8 பதக்கங்களை பெற்றுக் கொண்டது.

இன்று நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்சல் ஓட்டம் மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவிகள் தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டனர். 

இதேநேரம், 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வெற்றி கொண்டன.

இந்த நிலையில், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சி.ஜாம்சன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். குறித்த போட்டியில் 4.10 மீற்றர் உயரத்தை அவர் தாவியிருந்தார். 

அத்துடன், 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் சி.கஜன்சிகா வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், அதே போட்டியில் ஆண்கள் பிரிவில் கே. கேதுஷன் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தார்.

இதேநேரம், அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளை ஈட்டி வருகின்ற மகாஜனா கல்லூரி மாணவியான
சி. ஹெரினா, 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சலில் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டார். 

பவிதரன், டக்சிதாவுக்கு தங்கம்

18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ. பவிதரன் 4.40 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

குறித்த போட்டியில் மகாஜனா கல்லூரி மாணவன் சி.ஜாம்சன் வெள்ளிப் பதக்கத்தையும், அருணோதயா கல்லூரி மாணவன் விருஷான் வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.

இதேநேரம், 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட தேசிய கனிஷ்ட சம்பியனான யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியின் என். டக்சிதா, 3.10 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தையும், அதே கல்லூரியைச் சேர்ந்த வி. விசோபிகா 2.40 மீற்றர் உயரம் தாவி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர். 

குறித்த போட்டியில் மகஜனா கல்லூரி மாணவி சி. ஹெரினா (3.00 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட தடகளப் போட்டிகளின் சம்பியனாகிய மண்முனை வடக்கு பிரதேச செயலக அணி

மன்னாரை பின்தள்ளிய யாழ்ப்பாணம்

2019 ஆம் ஆண்டிற்கான வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகளின் மூன்றாவது நாள் நிறைவுக்குவரும் போது புள்ளிகள் பட்டியலில் யாழ்ப்பாணம் வலயம் 354 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

347 புள்ளிகளைப் பெற்ற மன்னார் வலயம் இரண்டாவது இடத்தையும், 346 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வலிகாமம் வலயம் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன. 

இது இவ்வாறிருக்க, தொடர்ந்து 3 நாட்களாக வெற்றிகரமாக நடைபெற்றுவந்த வடக்கு மாகாண பாடசாலைகள் மெய்வல்லுனர் விழாவின் நான்காவது நாள் போட்டிகள் நாளை (07) இடம்பெறவுள்ளது.  

மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க