வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் 8ஆவது விளையாட்டு நிகழ்வுகளின் கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் மன்னார் மாவட்ட தெரிவு அணியை பெனால்டியில் வீழ்த்திய யாழ் மாவட்ட அணி இவ்வருடத்திற்கான வட மாகாண சம்பியனாகத் தெரிவாகியது.
யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வுகளின் இறுதி நாள் நிகழ்வில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மாபெரும் இறுதிப் போட்டி ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னிலையில் இடம்பெற்றது.
மினி உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட யாழ் ஆடவர் மகளிர் அணிகள்
இதுவரை இடம்பெற்ற வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் உதைபந்தாட்ட தொடர்களில் மன்னார் மாவட்ட அணி அனைத்துப் தொடர்களிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதுடன் இதில் 5 முறை சம்பியனாகியுமுள்ளது. ஒரே ஒரு தடவை மட்டுமே யாழ் மாவட்ட அணி மன்னார் அணியை வீழ்த்தியுள்ளது. அதுவும் பெனால்டி முறையிலாகும்.
யாழில் அதிக கழகங்கள், திறமை வாய்ந்த வீரர்கள் மற்றும் அதிக உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் இடம்பெறுகின்ற போதும் மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகளின்போது சிறந்த அணியாக செயற்படுவது மிகவும் குறைவாக இருப்பதுவே, கடந்த கால தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பலராலும் தெரிவிக்கப்பட்டு வந்தது.
மன்னார் மாவட்ட அணியைப் பொறுத்தமட்டில் எப்பொழுதும் சிறப்பான பயிற்சிகள், ஒழுங்குபடுத்தல்கள் மூலம் இப்போட்டிகளில் சிறந்த பெறுபேற்றினை எப்பொழுதும் வெளிப்படுத்தியுள்ளது.
இதுவரை யாழ் – மன்னார் அணிகள் மோதிய ஆட்டங்களின் பெறுபேறுகள்
2009 – யாழ் 00 – 01 மன்னார்
2010 – யாழ் 00 – 04 மன்னார்
2011 – யாழ் 00 – 04 மன்னார்
2013 – யாழ் 01 – 01 மன்னார்
2014 – யாழ் 01 – 01 மன்னார்
2015 – யாழ் 02 – 02 மன்னார்
2016 – யாழ்: 00 – 01 மன்னார்
இந்நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பெரும் எதிர்பார்க்கிற்கு மத்தியில் இவ்வருடத்திற்கான இறுதிப் போட்டி ஆரம்பமானது. வட மாகாணத்தின் உதைபந்தாட்ட நட்சத்திரங்கள் அனைவரும் ஒரே போட்டியில் கலந்துகொள்வதனால் ஆட்டத்தின் வேகத்திலும் குறைவிருக்கவில்லை.
ரசிகர்களை பரவசப்படுத்தும் வகையிலான ஆட்டத்தை மன்னார் அணி முதல் பாதியில் வெளிப்படுத்தியபோதும் யாழ் அணியின் பின்கள வீரர்களின் சிறப்பான ஆட்டம் மன்னார் தரப்பினரின் கோல் போடும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.
23 வயதிற்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பிடிக்கக் கூடிய வீரர்கள் யார்?
முதற் பாதியில் பல தடவைகள் மான்னார் அணியின் பின்காளத்தை ஊடுருவி யாழ் அணியினரால் பந்து கடத்தப்பட்டிருந்தபோதும், அவர்கள் கோல் பெறுவதற்கு தவறியிருந்தனர். இருப்பினும் முதல் பாதியின் 44ஆவது நிமிடத்தில் மன்னார் அணியின் தாசனால் மிக தூரத்திலிருந்து உதைக்கப்பட்ட பந்து நேராக யாழ் அணியின் கோல் கம்பத்தினுள் புகுந்தது.
இதனால் மன்னார் அணிக்கான முதலாவது கோல் பெறப்பட, ஒரு கோலினால் அவ்வணி முன்னிலை வகித்த நிலையில் முதற்பாதியாட்டம் நிறைவடைந்தது.
முதல் பாதி: மன்னார் மாவட்ட தெரிவு அணி 1 – 0 யாழ் மாவட்ட தெரிவு அணி
சொந்த மைதானத்தின் ரசிகர்களின் உற்சாகத்துடன் வியூகங்களை மாற்றியமைத்து இரண்டாம் பாதியில் களமிறங்கிய யாழ் அணி வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும், மன்னார் வீரர்களும் சளைக்காமல் தமது பங்கிற்கு சவாலான ஆட்டதை வெளிப்படுத்தினர்.
பரபரப்பாக நகர்ந்த இரண்டாம் பாதியின் 87ஆவது நிமிடத்தில் யாழ் அணி வீரன் பிறேம்குமார் மன்னார் தரப்பின் தண்டப் பரப்பில் பின்கள வீரர்களை பந்துடன் கடக்க முற்பட்டார். இதன்போது மன்னர் பின்கள வீரர் அவரை முறையற்ற விதத்தில் தடுக்க முயற்சித்ததாகத் தெரிவித்த நடுவர், யாழ் அணியினருக்கு தண்ட உதைக்கான வாய்ப்பை வழங்கினார்.
இதன்போது யாழ் அணியின் கலிஸ்ரரினால் நேர்த்தியாக உதைக்கபட்ட தண்ட உதை கோலாக மாற யாழ் ரசிகர்களின் உற்சாகத்தினால் அரங்கமே அதிர்ந்தது.
எனவே, போட்டியின் நிறைவில் இரு அணிகளும் தலா ஒரு கோலுடன் இருந்தன.
முழு நேரம்: மன்னார் மாவட்ட அணி 1 – 1 யாழ் மாவட்ட அணி
இதன் காரணமாக வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சமநிலை உதையில் (பெனால்டி) 6-5 என்ற கோல்கள் கணக்கில் மன்னார் அணியை வீழ்த்திய யாழ் வீரர்கள் 2017ஆம் ஆண்டின் வட மகாண உதைபந்தாட்ட சம்பியனாகத் தெரிவாகினர்.